5291.

இறந்தவர்பிறந்த பயன் எய்தினர்கொல் என்கோ ?
மறந்தவர்அறிந்து உணர்வு வந்தனர்கொல் என்கோ ?
துறந்த உயிர்வந்து இடை தொடர்ந்ததுகொல்
                                   என்கோ ?
திறம் தெரிவதுஎன்னைகொல், இந் நல் நுதலி
                                    செய்கை ?

     இந் நல் நுதலிசெய்கை - அழகிய நெற்றியை உடையஇந்தப்
பிராட்டியின் செய்கைக்கு; (உவமையாக) இறந்தவர் - நெறி கடந்து
வாழ்ந்தவர்கள்; பிறந்த பயன் - பிறத்தலால் உண்டாகும் பயனை; எய்தினர்
கொல் என்கோ -
பெற்ற செய்கை என்று கூறுவேனோ; மறந்தவர் -
தம்மையே மறந்தவர்கள்; அறிந்து - தம்மையும் தலைவனையும் அறிந்து;
உணர்வு வந்தனர் கொல் என்கோ - பேருணர்வு பெற்ற செய்கை என்று
கூறுவேனோ ? துறந்த உயிர் - உடலைவிட்டு நீங்கிய உயிர்; இடைவந்து -
தக்க சமயத்தில் வந்து; தொடர்ந்தது கொல் என்கோ - ஒன்றுபட்டது என்று
கூறுவேனோ ? திறம் - பிராட்டியின் தன்மையை; தெரிவது என்னை -
அறிவது எப்படி.

     எய்தினர்,வந்தனர், என்னும் முற்றுக்கள் பெயரெச்சப் பொருள் தந்தது.
இன்றேல் இரண்டு எழுவாயைச் சந்திக்க நேரும். இருவகை முற்று ஈரெச்சம்
ஆகலும் (இலக்கணக் கொத்து 82) எய்திய செய்கை, வந்த செய்கை என
அமையும். திருவாழியைக் கண்ட பிராட்டியின் செயல் 6 பாடல்கள் பேசும்.
மறந்தவர் - தம்மை மறந்தவர்கள். தம்மை மறந்தவர்கள், தம்மையும்
தலைவனையும் அறிந்து பெறுவதே உணர்வு. பிறந்த பயன், என்பது
பிறத்தலால் பெறவேண்டிய பயன் (தொல், சொல் 236) கொல், அனைத்தும்
அசை.                                                 (64)