5292. | இழந்த மணிபுற்று அரவு எதிர்ந்தது எனல் ஆனாள்; பழந் தனம்இழந்தன படைத்தவரை ஒத்தாள்; குழந்தையைஉயிர்த்த மலடிக்கு உவமை கொண்டாள்; உழந்து விழிபெற்றது ஓர் உயிர்ப் பொறையும் ஒத்தாள். |
(திருவாழியைக் கண்டபிராட்டி) இழந்த மணி -தவறவிட்டமாணிக்கத்தை; எதிர்ந்தது புற்று அரவு எனல் ஆனாள் - தன் எதிரில் கண்ட புற்றில் உள்ள பாம்பு என்று கூறும்படி இருந்தாள்; இழந்தன பழந்தனம் - இழந்துவிட்ட பழைய செல்வத்தை; படைத்தவரை ஒத்தாள் - (மறுபடியும்) பெற்ற வறியவரை ஒத்திருந்தாள்; குழந்தையை உயிர்த்த - குழந்தையைப் பெற்றெடுத்த; மலடிக்கு உவமை கொண்டாள் - மலடிக்கு உவமானம் ஆயினாள்; உழந்து - பலநாட்கள் துன்பத்தில் வருந்தி; விழிபெற்றது - கண்களைப் பெற்ற; ஓர் உயிர்ப் பொறையும் - ஒப்பற்ற உடம்பையும்; ஒத்தாள் - ஒத்திருந்தாள். அம்மைக்குமோதிரம் கிடைத்தது, பாம்பு, தவறவிட்ட மணியைப் பெற்றது போலவும், வறுமையாளன் இழந்த செல்வத்தை மீளப் பெற்றதைப் போலவும், மலடி குழந்தையைப் பெற்றது போலவும், குருடன் விழி பெற்றது போலவும் இருந்தது. பிராட்டியைப் பாம்பு என்று கூறலாமா ? அமுதமான அம்மை தீயர் செய்கையால் நஞ்சு ஆனாள். நஞ்சுதான் அரக்கர் குடிக்கு என்று நங்கையை அவன் தம்பியே சொன்னான் என்று பெரிய திருமொழி பேசும் (பெரிய 10-2-4) வால்மீகம், சீதை மகா சர்ப்பம் போன்றவள். அவள் கவலை கொண்டு முகத்தை வைத்திருக்கும் ஐந்து விரல்களே அதன் ஐந்து தலைகள் என்று பேசும். (கம்ப. 7351) கவிச் சக்கரவர்த்தி, 'திட்டியின் விடமன கற்பின் செல்வி' என்று கும்பகர்ணன் வாயிலாகப் பேசுவான். இங்கு மணியிழந்த நாகம் மீண்டும் மணிபெறும் தன்மைக்கே ஒப்பீடு என்பதை அறிந்தால் சீதை நாகமா என்ற வினாவுக்கே இடம் இல்லை என்பதையும் அறிக. (65) |