5295.

நீண்டவிழி நேரிழைதன் மின்னின் நிறம் எல்லாம்
பூண்டது, ஒளிர்பொன் அனைய பொம்மல் நிறம்;
                                மெய்யே !
ஆண்தகைதன்மோதிரம் அடுத்த பொருள் எல்லாம்
தீண்டு அளவில்,வேதிகை செய் தெய்வ
                              மணிகொல்லோ ?

     நீண்ட விழிநேரிழைதன் - நீண்ட கண்களையும்அழகிய
ஆபரணங்களையும் உடைய பிராட்டியின்; மின்னின் நிறம் எல்லாம் -
மின்னல் போலப் பசலை படர்ந்த மேனி முற்றும்; ஒளிர் - விளங்குகின்ற;
பொன் அனைய - பொன்னை ஒத்த; பொம்மல் நிறம் பூண்டது  -
பொலிவுடைய நிறத்தைப் பெற்றது; (இந்த மாற்றம்) மெய்யே - உண்மையே
(ஆதலால்); ஆண் தகைதன் - ஆடவருள் தலைசிறந்த இராமபிரானின்;
மோதிரம் - மோதிரம் ஆனது; அடுத்த பொருள் எல்லாம் - தன்னைச்
சார்ந்த எல்லாப் பொருள்களையும்; தீண்டு அளவில் - தொட்ட மாத்திரத்தில்;வேதிகை செய் - பொன்னாக மாற்றுகின்ற; தெய்வமணி
கொல் -
தெய்வத்தன்மை பெற்ற ரச குளிகையோ.

     வேதிகை செய்தல்- ஒரு பொருளை வேறு பொருளாக மாற்றுதல்.
பரிசவேதி செம்பைப் பொன்னாக்கும் என்பது சித்தரின் கொள்கை. இரச
குளிகையினால் களிம்பு அற்றுப் பொன்னாய்ச் செம்பொனுடன் சேரும்.
(சிவ.சித்தி 11.2.9.) மின் நிறம் பொன்நிறம் ஆயிற்று. மோதிரம் பரிசவேதியோ
என்று கவிச்சக்கரவர்த்தி வியக்கின்றார்.                        (68)