5296. 

இருந்து பசியால் இடர் உழந்தவர்கள் எய்தும்
அருந்தும் அமுது ஆகியது; அறத்தவரை அண்மும்
விருந்தும் எனல்ஆகியது; வீயும் உயிர் மீளும்
மருந்தும் எனல்ஆகியது; வாழி மணி ஆழி !

     மணி ஆழி -மணிகள்பதித்த அந்த மோதிரம்; பசியால் -
பசியினால்;இருந்து - (பிறிதோரிடம் செல்லாமல்) வீட்டிலே

இருந்து; இடர்உழந்தவர்கள் - துன்பத்தால் வருந்தியவர்கள்; எய்தும் -
அடைந்த; அருந்தும் அமுது ஆகியது - உண்ணும் உணவாக ஆயிற்று;
அறத்தவரை - இல்லறத்தில் இருப்பவரை; அண்மும் - சென்று சேர்ந்த;
விருந்தும் எனல் ஆகியது - விருந்தாளி என்று கூறும் படியாகவும் ஆயிற்று;
வீயும் உயிர் - இறக்கப் போகும் உயிர்; மீளும் - திரும்புதற்குக்
காரணமாயிருக்கும்; மருந்தும் எனல் ஆகியது - மருந்து என்று
கூறும்படியாகவும் ஆயிற்று; வாழி - அந்த திருவாழி பல்லாண்டு வாழ்க.

    விருந்தும்மருந்தும் என்பதில் உள்ள உம்மைகளை எனலும் ஆகியது
என்று இரண்டிடத்தும் சேர்க்க. விருந்து எனலும் ஆகியது மருந்து எனலும்
ஆகியது என அமையும். விருந்தினர் முகம் காணும் நல்ல இல்லறத்தார்
மகிழ்வர். விருந்தினர் முகம் கண்டு அன்ன விழா என்று முன்பு பேசப்
பெற்றது (நாட்டு - 15) விழாவைக் காணும் போது உண்டாம் மகிழ்ச்சி
விருந்தால் உண்டாம் என்பது குறிப்பு. விருந்து கண்டு ஒளிக்கும் வாழ்க்கை
திருந்தா வாழ்க்கை என்று இகழப்படும்.                         (69)