சீதை அனுமனைவாழ்த்துதல். 5297. | இத்தகையள் ஆகி, உயிர் ஏமுற விளங்கும், முத்த நகையாள்,விழியின் ஆலி முலை முன்றில் தத்தி உக, மென்குதலை தள்ள, 'உயிர் தந்தாய் ! உத்தம !' எனா,இனைய வாசகம் உரைத்தாள்; |
(திருவாழிபெற்றமையால்) உயிர் ஏமுற -உயிரினம்மகிழ்ச்சி பெருக (அதனாலே); விளங்கும் - பொலிவுறுகின்ற; முத்த நகையாள் - முத்தை ஒத்த பற்களை உடைய பிராட்டி;இத்தகையள் ஆகி - இப்படிப்பட்ட மெய்ப்பாடு உடையவளாய்; விழியின்ஆலி - கண்களில் வழியும் நீர்த்துளிகள்; முலை முன்றில் - தனங்களின்மேற்பரப்பில்; தத்தி உக - பட்டுத் தெறித்துச் சிதறவும்; மென் குதலை தள்ள- மெல்லிய மழலைச் சொற்கள் தடுமாறவும்; (பூரித்து) உத்தம ! -மேலானவனே (நீ); உயிர் தந்தாய் - என் உயிரை வழங்கினாய்; எனா - என்று (புகழ்ந்து); இனைய வாசகம் - இந்த மொழிகளை; உரைத்தாள் - கூறினாள். அகத்தின்மகிழ்ச்சி பிராட்டியின் பற்களில் விளங்கிற்று. முலை முன்றில் - மார்பின் மேற்பரப்பு. ஏந்து முலை முற்றம் (அகம் 51) ஆலி - நீர்த்துளி. இங்கு கண்ணீரைக் குறிக்கிறது. தன்னை வருத்தியும் பிறருக்கு உதவுபவன் உத்தமன் (திருப்பாவை - ஓங்கி உலகளந்த - உரை) வாசகம் பொருள் பொதிந்த சொல். (70) |