அறுசீர்விருத்தம்

5298.

'மும்மை ஆம் உலகம் தந்த முதல்வற்கும் முதல்வன்
                            தூது ஆய்,
செம்மையால்உயிர் தந்தாய்க்குச் செயல் என்னால்
                            எளியது உண்டே ?
அம்மை ஆய்,அப்பன் ஆய அத்தனே ! அருளின்
                            வாழ்வே !
இம்மையேமறுமைதானும் நல்கினை, இசையோடு'
                            என்றாள்.

     மும்மை உலகம்தந்த - மூன்று உலகங்களையும் படைத்த;
முதல்வற்கும் - முன்னோன் ஆகிய பிரம்ம தேவனுக்கும்; முதல்வன் தூதாய்
-
தந்தையாகிய இராமபிரானின் தூதுவனாய் வந்து; செம்மையால் - நிறைவு
பெற்ற பண்பினாலே; உயிர் தந்தாய்க்கு - (எனக்கு) உயிரை வழங்கிய
உனக்கு; என்னால் - (சிறையிலிருக்கும்) என்னாலே; செயல் - உனக்குச்
செய்வதற்கு; எளியது (ம்) உண்டே - எளிமையான உதவியும் உள்ளதா ?
அம்மையாய் - தாயாகவும்; அப்பன் ஆய - தந்தையாகவும் உள்ள;
அத்தனே - என் தெய்வமே; அருளின் வாழ்வே - அருளுக்கு வாழ்வைத்
தருபவனே (நீ); இம்மையே - இப் பிறப்பிலேயே; மறுமை தானும் - மறுமை
வாழ்வையும்; இசையோடு நல்கினை - புகழுடன் வழங்கினாய்; என்றாள் -
என்று பிராட்டி கூறினாள்.

     மும்மை ஆம்உலகம் - என்பதில் உள்ள ஆம் அசை. பணியுமாம்
என்றும், அணியுமாம் என்றும் குறட்பகுதிக்குக் குறிப்புரை வழங்கிய அழகர்,
'ஆம்' என்பன இரண்டும் 'அசை' என்றார். மும்மை உலகு என்று அமைக்க.
மும்மை என்பது மூன்று தன்மையைக் குறிக்காமல் மூன்று என்னும் எண்ணைக்
குறிக்கிறது. முப்பத்து மும்மைத் தேவர் சென்று ஏத்தும் தில்லை (திருக்கோவை
337) மறுமை தானும் என்பதில் உள்ள தான் அசை. மறுமையும் என்று
அமைக்க. உயிரையும் இம்மையில் மறுமைப் பயனையும் வழங்கிய உன்
உதவிக்கு மிகப் பெரிய கைம்மாறு செய்ய வேண்டும். ஆனால் என்பால் எளிய
உதவி கூட இல்லையே,
 என்று பிராட்டி மனம்கரைகின்றாள். தினைத் துணை
நன்றிக்குப் பனைத்துணை நன்றி செய்க என்கிறது வேதம். பனைத் துணை
நன்றி செய்த உனக்கு என்ன செய்யவுள்ளது, என்று பிராட்டி மனம்
கரைகின்றாள். உன் உதவிக்கு மற்றும் ஓர் உதவி உண்டு என்று கருதின் அது
மகாபாதகம். ஆதலின் எளியது உண்டோ என்று கூறி மனம் கரைகின்றாள்.
இராமபிரான் திருமாலின் அம்சம் ஆதலின் அவன் திருமாலாகவே
பேசப்படுவான்.                                          (71)