இராமலக்குவரைப்பற்றி வினவிய சீதைக்கு அனுமன்விடையிறுத்தல். 5300. | மீண்டு உரைவிளம்பலுற்றாள், 'விழுமிய குணத்தோய் ! வீரன் யாண்டையான்,இளவலோடும் ? எவ் வழி எய்திற்று உன்னை ? ஆண்தகை, அடியேன்தன்மை யார் சொல, அறிந்தது ?' என்றாள்; தூண் திரள் தடந்தோளானும், உற்றது சொல்லலுற்றான்: |
(பிராட்டி) மீண்டு உரைவிளம்பலுற்றாள் - மறுபடியும் பேசத்தொடங்கி; (அனுமனை நோக்கி) விழுமிய குணத்தோய் - சிறந்த குணங்களைப் பெற்ற அனுமனே; வீரன் - இராமபிரான்; இளவலோடும் யாண்டையான் - இளைய பெருமாளுடன் எங்கே உள்ளான் (இராமபிரான்); உன்னை எவ்வழி எய்திற்று - உன்னை எவ்விடத்தில் சந்தித்தது; ஆண் தகை - இராமபிரான்; அடியேன் தன்மை - என்னுடைய நிலையை; யார் சொல அறிந்தது - எவர் கூற அறிந்தது; என்றாள் - என்று வினவினாள் (அதுகேட்ட); திரள் தூண் - திரண்ட தூண் போன்ற; தடந்தோளான் - அகன்ற தோளை உடைய அனுமனும்; உற்றது சொல்லல் உற்றான் - நிகழ்ந்ததைக் கூறத் தொடங்கினான். காதல் மகளிர்தம்மை 'அடிச்சி' என்று கூறிக் கொள்வதைப் பிரபந்தத்தில் காண்கிறோம். தாமரைக் கையை.... அடிச்சியேம் தலை மிசை அணி' என்று சடகோபநாயகி பேசினாள் (திருவாய் 10.3.5) அதை அறிந்த பிராட்டி தன்னை 'அடியேன்' என்றாள். (73) |