5301. | 'உழைக் குலத் தீய மாய உருவு கொண்டு, உறுதல் செய்தான், மழைக் கருநிறத்து மாய அரக்கன், மாரீசன் என்பான்; இழைத் தட மார்பத்து அண்ணல் எய்ய, போய், வையம் சேர்வான் அழைத்தது அவ்ஓசை; உன்னை மயக்கியது அரக்கன் சொல்லால். |
அரக்கன்சொல்லால் - இராவணன் கட்டளைப்படி;மழைக் கருநிறத்து - மேகம் போலும் கரிய நிறத்தையுடைய; மாய அரக்கன் - மாயையில் வல்ல அரக்கனாகிய; மாரீசன் என்பான் - மாரீசன் என்பவன்; உழைக்குலம் - மான் இனத்தைச் சேர்ந்த; தீய - தீமையே வடிவமான; மாய உருவு கொண்டு - மாய மானாக வடிவம் எடுத்து; உறுதல் செய்தான் - காட்டின் கண்ணே வந்தான்; இழை தட மார்பத்து அண்ணல் - அணிகள் அணிந்த மார்பை உடைய இராமபிரான்; எய்ய - அம்பை ஏவுதலாலே; போய் - உயிர் நீங்கப் பெற்று; வையம் சேர்வான் - பூமியில் விழும் நிலையின் கண்; அழைத்தது அவ் ஓசை - கூப்பிட்ட அக் கொடிய கூக்குரல்; உன்னை மயக்கியது - உன்னை மயக்கம் செய்தது. இதுமுதல் 382பாடல்வரை அனுமன் கூற்று. இராமபிரான் ஆபரணம் இன்றி இருக்கும் போது இழைத்தட மார்பத் தண்ணல் என்று கூறலாமா.... என்பர். இத்தகைய இடங்களில் நச்சர் பெயராய் நின்றது என்று குறிப்பிடுவர். இழைத் தட மார்பத் தண்ணல் என்பதற்குப் பொருள் இராமன் என்பதே. அழகர் அடியளந்தான் என்பது வாளா பெயராய் நின்றது என்றார் (திருக்குறள் 610) இது, உபசார வழக்கு என்று அடை - பதிப்பு கூறும். வால்மீகம், மாயமான் இளைய பெருமாள் பெயரையும் பிராட்டியின் பெயரையும் கூறி விழுந்ததாகப் பேசும். கவிச்சக்கரவர்த்தி 'அட்ட திக்கினும் அப்புறத்தும் புக விட்டழைத்து ஒரு குன்றென வீழ்ந்தனன்' என்று கூறுவார் (கம்ப. 3313.) எய்யப் போய் வெய்ய சொல்லால் என்னும் பாடமும், அழைத்த பொய்க் குரலின் ஓசை மயக்கிய துன்னை அம்ம' என்னும் பாடமும் நன்று. இப்பாட பேதங்கள் சில சுவடிகளில் தான் உள்ளன. (74) |