5302.

' "இக் குரல் இளவல் கேளாது ஒழிக" என,
                         இறைவன் இட்டான்
மெய்க் குரல்சாபம்; பின்னை, விளைந்தது விதியின்
                         வெம்மை;
"பொய்க் குரல்இன்று, பொல்லாப் பொருள் பின்பு
                         பயக்கும்" என்பான்,
கைக் குரல் வரிவில்லானும், இளையவன் வரவு
                         கண்டான்.

     இறைவன் -இராமபிரான்; இளவல் இக்குரல் - தம்பியாகிய
இலக்குவன் இக் குரல் ஒலியை; கேளாது ஒழிக என - கேட்காமற்
போகட்டும் என்று கருதி; சாப மெய் குரல் - தன் வில்லின் மெய்யான
ஒலியை; இட்டான் - உண்டாக்கினான்; பின்னை (உம்) - அங்கனம்
உண்டாக்கிய பின்னும்; விதியின் வெம்மை - விதியினுடைய விருப்பம்;
விளைந்தது - நிறைவேறிற்று; இன்று - இன்றைய தினம் தோன்றிய
(அரக்கனின்); பொய்க்குரல் - பொய்யான (மானின்) குரலால்; பின்பு -
பின்னர்; பொல்லாப் பொருள் - தீய செயலானது; பயக்கும் என்பான் -
நிகழப் போகிறது என்று கருதிய; கைக்குரல் வரி வில்லானும் - கையில்
பொருந்திய வில்லேந்திய இராமபிரான்; இளையவன் வரவு - இலக்குவன்
வருதலை; கண்டான் - பார்த்தான்.

     மாயமான் குரல்கேளாமல் போகட்டும் என்று இராமபிரான் வில் ஒலியை
எழுப்பியது முன்பு பேசப்படவில்லை. இங்ஙனம் முன்பு பேசாததைப் பின்பு
கூறுவது கவிச்சக்கரவர்த்தியின் இயல்பு. வெம்மை - விருப்பம். 'வெம்மை
வேண்டல்' என்று தொல்காப்பியம் பேசும். (தொல் உரி 334) வெப்பம் என்றும்
கூறலாம். பொய்க்குரல் இன்று - பொய்க்குரல் போல் இல்லை என்றும் கூறப்
பெற்றது. பொல்லாப் பொருள் - தீய செயல். ஒரு பொருள்
சொல்லுவதுடையேன் (கலி 8)                                (75)