5305. | 'அந் நிலைஆய அண்ணல், ஆண்டு நின்று, அன்னை ! நின்னைத் துன் இருங் கானும்யாறும் மலைகளும் தொடர்ந்து நாடி, இன் உயிர்இன்றி ஏகும் இயந்திரப் படிவம் ஒப்பான், தன் உயிர்புகழ்க்கு விற்ற சடாயுவை வந்து சார்ந்தான். |
அன்னை - தாயே; அந்நிலை ஆய அண்ணல் - அப்படிப்பட்ட நிலையை அடைந்த இராமபிரான்; ஆண்டு நின்று - அந்தப் பர்ணசாலையிலிருந்து; நின்னை - உன்னை; துன் அருங்கானும் - நெருங்கிய பெரிய காடுகளையும்; யாறும் மலைகளும் - ஆறுகளையும் மலைகளையும்; தொடர்ந்து நாடி - நெருங்கித் தேடிப் பார்த்து; (அங்கெல்லாம் உன்னைக் காணாமையால்) இன் உயிர் இன்றி - இனிய உயிர் இல்லாமல்; ஏகும் - செல்கின்ற; இயந்திரப்படிவம் ஒப்பான் - எந்திரப் பாவையை ஒத்தவனாய்; தன் உயிர் - தன்னுடைய உயிரை; புகழ்க்கு விற்ற சடாயுவை - புகழின் பொருட்டாக வழங்கிய சடாயுவை; வந்து சார்ந்தான் - வந்து அணுகினான். இயந்திரத்துக்குஉயிர் இல்லை. பெருமானும் அப்படியிருந்தான். 'புகழ் எனில் உயிரும் கொடுக்குவர்' என்று சங்க நூல் பேசும். அதை அடி ஒற்றி உயிர் புகழ்க்கு விற்ற சடாயு என்று புகழப் பெற்றது. இராமபிரான் சடாயுவின் தியாகத்தைத் தெய்வ மரணம் என்று பேசுவான். (கம்ப. 6477.) சுக்கிரீவன், 'காட்டிலே கழுகின் வேந்தன் செய்தன காட்ட மாட்டேன்" (கம்ப. 6933) என்று பேசி வருந்துவான். சம்பந்தப் பெருமான் சடாயுவைப் பத்துப் பாசுரங்களாலும், போற்றுவார். (புள்ளிருக்கு வேளூர்ப் பதிகம்) வந்து சார்ந்தான் என்பதில் உள்ள வந்து அசை என்றும் கொள்ளலாம். (78) |