5306. | 'வந்து, அவன் மேனி நோக்கி, வான் உயர் துயரின் வைகி, "எந்தை ! நீஉற்ற தன்மை இயம்பு" என, இலங்கை வேந்தன், சுந்தரி !நின்னைச் செய்த வஞ்சனை சொல்லச் சொல்ல, வெந்தன உலகம்என்ன, நிமிர்ந்தது சீற்ற வெந் தீ. |
சுந்தரி -குண அழகுபெற்றவளே; வந்து - சடாயுவின் பக்கத்தே வந்து(இராமபிரான்); அவன் மேனி நோக்கி - சடாயுவின் (போர்க்காயம் பெற்ற)திருமேனியைப் பார்த்து; வான் உயர் துயரின் வைகி - மிகப் பெரிய துன்பத்தில் ஆழ்ந்து; எந்தை - என்னுடைய தந்தையே; நீ உற்ற தன்மை - நீ துன்பமடைந்த காரணத்தை; இயம்பு என - கூறுக என்று சொல்ல (சடாயு); இலங்கை வேந்தன் - இலங்கை அரசனான இராவணன்; நின்னைச் செய்த -உனக்குச் செய்த; வஞ்சனை சொல்ல சொல்ல - வஞ்சகத்தை ஒவ்வொன்றாகஎடுத்துக் கூறுந்தொறும் கூறுந் தொறும்; சீற்ற வெந் தீ - இராமபிரானின்கோபமாகிய கொடிய நெருப்பு; உலகம் வெந்தன என்ன - உலகம் வெந்துபோயின என்று கூறும்படி; நிமிர்ந்தது - படிப்படியாக வளர்ந்தது. நின்னைச் செய்த- நினக்குச் செய்த - உருபு மயக்கம். சொல்லச் சொல்ல, சீற்றவெந்தீ நிமிர்ந்தது என முடிக்க. சொல்லும் தோறும் சொல்லும் தோறும் சீற்றத் தீ படிப்படியாக வளர்ந்தது. சொல்லச் சொல்ல பொருளொடு புணர்ந்த அடுக்கு. (79) |