'அயர்ந்தவர், அரிதின் தேறி, ஆண் தொழில் தாதைக்கு, ஆண்டு, செயத் தகுகடன்மை யாவும், தேவரும் மருளச் செய்தார்; "கயத் தொழில்அரக்கன்தன்னை நாடி, நாம் காண்டும்" என்னா, புயல் தொடுகுடுமிக் குன்றும், கானமும், கடிது போனார்.
அயர்ந்தவர் -மனம்சோர்ந்த இராமலக்குவர்கள்; அரிதின் தேறி - சிரமப்பட்டுத் தெளிந்து (அவர்கள்); ஆண் தொழில் தாதைக்கு - ஆண்மைத்தொழில் புரிந்த தந்தைக்கு; ஆண்டு செயத் தகு கடன்கள் யாவும் -அவ்விடத்துச் செய்ய வேண்டிய கடமைகள் யாவற்றையும்; தேவரும் மருள -தேவர்களும் வியந்து மருட்சியடைய; செய்தார் - செய்து நிறைவேற்றினர்(பிறகு) (இராமலக்குவர்கள்); கயத் தொழில் அரக்கன் தன்னை - கயமைத் தொழிலில் வல்லஇராவணனை; நாடி நாம் காண்கும் என்னா - நாம் தேடிக் கண்டு பிடிப்போம் என்று கருதி; புயல் தொடும் - மேகமண்டலத்தை அளாவிய; குடுமிக் குன்றும் - சிகரத்தை உடைய மலைகளையும்; கானமும் - காடுகளையும் (கடந்து); கடிது - விரைந்து; போனார் - சென்றனர்.
கயமைத் தொழில்என்பது கயத் தொழில் என்று வந்தது; தம்மை நியமிப்பார் இன்றி மனம் விரும்பியபடி செய்பவன் கயவன். (82)