5310. | 'அவ் வழி,நின்னைக் காணாது, அயர்த்தவர் அரிதின் தேறி, செவ் வழிநயனம், செல்லும் நெடு வழி சேறு செய்ய, வெவ் அழல் உற்றமெல்லென் மெழுகு என அழியும் மெய்யன், இவ் வழி இனையபன்னி, அறிவு அழிந்து, இரங்கலுற்றான். |
அவ்வழி -அந்தஇடங்களில்; நின்னைக் காணாது - உன்னைக் காணாமையால்; அயர்த்தவர் - கலங்கிய இராமலக்குவர்; அரிதில் தேறி - ஒருவாறு தெளிவு பெற்று; செவ் அழி நயனம் - (அழுததால்) செவ்விகுன்றிய கண்கள்; செல்லும் நெடுவழி - அவர்கள் செல்லும் வழியை; சேறு செய்ய - (கண்ணீரால்) சேற்றை உண்டு பண்ணவும்; வெவ் அழல் உற்ற - (இராமன்) கொடிய நெருப்பை அடைந்த; மெல்லென் மெழுகு என அழியும் - மெல்லிய மெழுகுபோல் இளைக்க நின்ற; மெய்யன் - உடம்புடையனாய்; இவ்வழி - இந்த நிலையில்; இனைய பன்னி - இந்த வார்த்தைகளைக் கூறி; அறிவு அழிந்து - அறிவு கெட்டு; இரங்கல் உற்றான் - மனம் கரைந்தான். காணாதுஅயர்ந்தவர் இருவராதலின் பன்மையாகவும், பிரிவுத் துயரால் பெரிது இரங்கிப் புலம்பியவன் இராமன் ஒருவனே ஆதலால் மெய்யன், உற்றான் என்று ஒருமையாகவும் கூறினர். செவ்வழி என்பதற்கு, சிவந்த காந்தி வழிகிற, என்றும் (மகாவித்துவான் வி், கோவிந்தப் பிள்ளை) செம்மை மிகுந்த என்றும் (வை,மு,கோ) செம்மை நிறம் மிகுந்த (அண்ணா - பதிப்பு) நன்றாக என்றும் (அடை - பதிப்பு) உரைகள் கூறப் பெற்றன. (83) |