5314. | ' "பொன் மான் உருவால் சில மாயை புணர்க்க அன்றோ, என் மான்அகல்வுற்றனள் இப்பொழுது என்கண் ?" என்னா, நன் மான்களைநோக்கி, "நும் நாமமும் மாய்ப்பென் இன்றே, வில் மாண்கொலை வாளியின்" என்று, வெகுண்டு நின்றான். |
பொன்மான்உருவால் - (அரக்கன்) பொன் போலும் மான் வடிவத்தால்; சில மாயை புணர்க்க அன்றோ - சில மாயைகளைச் செய்ததனால் அல்லவா; என்கண் - என்னிடத்திலிருந்து; என்மான் - என்னுடைய மான் போன்ற சீதை; இப்பொழுது - இந்தச் சமயத்தில்; அகல்வுற்றனள் - பிரிந்து சென்றனள்; என்னா - என்று கூறி; நன் மான்களை நோக்கி - பிறர்க்குத் தீங்கு செய்யாத மான்களைப் பார்த்து; இன்றே - இன்றைய தினமே; வில் மாண் கொலை வாளியின் - வில்லிலே மாட்சிமைப் பட்ட கொலைத் தொழில் செய்யும் அம்பாலே; நும் நாமமும் - உங்களுடைய பெயரையும்; மாய்ப்பேன் - அழிப்பேன்; என்று வெகுண்டு நின்றான் - என்று கூறிச் சீறி நின்றான். புணர்த்த -செய்ய. தூமமென் குழலியர் புணர்த்த சூழ்ச்சியால் (திருவவதாரம் 47) 'வில் மாண்' என்று பாடம் கொள்வாரும் உளர். வில்மாண் - வில்லுக்குச் சுவாமியான இராமன் என்பது பழைய உரை. (87) |