5315. | 'வேறுற்ற மனத்தவன், இன்ன விளம்பி நோவ, ஆறுற்ற நெஞ்சின்தனது ஆர் உயிர் ஆய தம்பி கூறுற்ற சொல்என்று உள கோது அறு நல் மருந்தால் தேறுற்று, உயிர்பெற்று, இயல்பும் சில தேறலுற்றான். |
வேறு உற்றமனத்தவன் - வேறுபட்ட மனத்தை உடையஇராமபிரான்; இன்ன - இப்படிப்பட்டவற்றை; விளம்பி நோவ - சொல்லி வருத்தம் அடைய(அப்போது); ஆறு உற்ற - ஆறுதலைப் பெற்ற; நெஞ்சின் - மனத்தைஉடைய; தனது ஆர் உயிர் ஆய - தனது அரிய உயிர் போன்ற; தம்பி -தன்னுடைய தம்பியான இலக்குவன்; கூறுற்ற - எடு்த்துக்கூறிய; சொல் என்றுஉள - சொற்கள் என்று உள்ள; கோதறு - குற்றம் அற்ற; நல் மருந்தால் -நல்ல மருந்தினால்; தேறுற்று - தெளிவு பெற்று; உயிர்பெற்று - வலிமைபெற்று; சில இயல்வும் - சில உபாயங்களையும்; தேறல் உற்றான் -ஆராயத் தொடங்கினான். உயிர்பெற்று -வலிமைபெற்று. உயிர் படைத்து.. ஓடல் உற்றது வடவைத்தீ (வருணனை 56) கம்பன் கழகம், உயிர் - வலிமை என்று விளக்கிற்று இயல்வு - உபாயம். வேள்வியும் நல் அறமும் இயல்பு (முதல் - அந் - 12) இவ்வுரையும் மேற்கோளும் வழங்கியது அண்ணாமலை கழகப்பதிப்பு. உபாயம்என்றது பிராட்டியைத் தேடுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நெறியை. ஆர் உயிராய தம்பி என்ற தொடரையும், 'தம்பியர் அல்லது தனக்கு வேறு உயிர் இம்பரின் இலது என எண்ணி ஏய்ந்தவன்' (கம்ப. 3969) என்னும் அடிகளையும் ஒப்பிடுக. (88) |