5316. | 'வந்தான்இளையானொடு, வான் உயர் தேரின் வைகும் நந்தாவிளக்கின் வரும் எம் குல நாதன் வாழும் சந்து ஆர் தடங்குன்றினில்; தன் உயிர்க் காதலோனும் செந் தாமரைக்கண்ணனும், நட்டனர் தேவர் உய்ய. |
(இராமபிரான்) வான் உயர் -விண்ணில் உயர்ந்துள்ள; தேரின் வைகும் - தேரிலே வீற்றிருக்கும்; நந்தா விளக்கின் வரும் - குறைவுபடாத சூரியன் பால் உதித்த;எம்குல நாதன் வாழும் - எமது குலத்தவனான சுக்கிரீவன் தங்கிய; சந்துஆர் - சந்தன மரங்கள் செறிந்த; தடங்குன்றினில் - பெரிய இருசிய மூகமலையில்; இளையானொடு வந்தான் - இளைய பெருமாளுடன் வந்தான்; (அங்கு) செந்தாமரைக் கண்ணனும் - தாமரை போன்ற கண்களை உடைய இராமபிரானும்; தன் உயிர்க்காதலோனும் - தன்னுடைய உயிர் மேல் அன்புள்ள சுக்கிரீவனும்; தேவர் உய்ய - தேவர்கள் வாழ்வு பெற; நட்டனர் - நட்புப் பூண்டனர். நந்தா விளக்கு -சூரியன். வருதல் - தோன்றுதல் (பிறத்தல்) தசரதன் மதலையாய் வருதும் (திரு அவதாரம்) சந்து - சந்தனம். அந்துவன் பாடிய சந்து செழு நெடுவரை (அகம் 59) தாமரைக்கண்ணன் - திருமால் (இராமபிரான்) தன்உயிர்க்காதலோன் - சுக்கிரீவன் - தன்னுடைய உயிர்மேல் ஆசை வைத்தவன்வாலிக்குப் பயந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ரிசியமுகபர்வதம் வந்தவன்என்ற வரலாறு காண்க. (89) |