5317.

'உண்டாயதும், உற்றதும், முற்றும் உணர்த்தி, உள்ளம்
புண்தான் எனநோய் உற விம்முறுகின்ற போழ்தின்,
எண்தான் உழந்துஇட்ட நும் ஏந்து இழை, யாங்கள்
                                     காட்ட,
கண்டான், உயர்போதமும் வேதமும் காண்கிலாதான்.

     உயர் வேதமும் -உயர்ந்தவேதங்களும்; போதமும் - (அவற்றால்
உளதாம்) பேரறிவும்; காண்கிலாதான் - காணவியலாத பரம்பொருளாகிய
இராமபிரான்; உண்டாயதும் - தனக்கு நேர்ந்த அவலத்தையும்; உற்றதும் -
அங்கு வந்ததையும்; முற்றும் உணர்த்தி - அறிவித்து; உள்ளம் -
இதயமானது; புண்தான் என நோய்உற - புண்ணால் ஆக்கப் பெற்றது என்று
கூறும்படி துன்பமுற; விம்முறுகின்ற போழ்தின் - நிலைகுலைந்த சமயத்தில்;
யாங்கள் -
நாங்கள்; நும் - உங்களுடைய; எண்தான் உழந்திட்ட - நீங்கள்
மனம் வருந்தி கிட்கிந்தையில் இட்ட; ஏந்திழை காட்ட - ஆபரணங்களைக்
காண்பிக்க (அதனை ஐயன்); கண்டான் - பார்த்தான்.

     விம்முறுதல் -நிலைகுலைதல். நின் ஏந்திழை என்னும் பாடம் சிறக்கும்
போலும். இதுவரை பிராட்டி ஒருமையில் பேசப்பட்டாள் - இங்கு மாத்திரம்
பன்மையா ? எண் - எண்ணம் - உள்ளம். இங்குள்ள தான் அசை எண்
உழந்திட்ட என அமையும். போதம் - சிந்தை. வேதம் - மொழி. சிந்தையும்
மொழியும் பரம் பொருளை உணர்த்தா என்பதைக் கவிச் சக்கரவர்த்தி
குறிப்பால் பேசுகிறார். இப் பணி பொன்தான் என்ற இடத்தில் பணி பொன்னால்ஆக்கப் பெற்றது என அறிகிறோம். அது போல் உள்ளம்
புண்தான் என்றஇடத்தும் உள்ளம் புண்ணால் ஆக்கப் பெற்றது என்று அறிக.
உள்ளம்கொண்டு ஓர் உருச் செய்தாங்கு.... ஆக்கை அமைத்தனர் என்னும்
வாசகஅமைப்பை நோக்கி்த் தெளிக. எண்தான் உழந்திட்ட - தேவரீர்
திருவுள்ளத்திலே எண்ணித் திருப்பரிவட்டத்திலே பொதிந்து எறிந்த ஆபரணம்
என்பது பழைய உரை (அடை - பதி)                          (90)