5320. | 'ஆயானை, ஓர் அம்பினில் ஆர் உயிர் வாங்கி, அன்பின் தூயான்வயின்,அவ் அரசு ஈந்தவன், "சுற்று சேனை மேயான் வருவான்"என விட்டனன்; மேவுகாறும் ஏயான்,இருந்தான், இடைத் திங்கள் இரண்டு இரண்டும். |
ஆயானை - ஆகிய வாலியை; ஓர் அம்பினில் - ஒரு அம்பினாலே; ஆர் உயிர் வாங்கி - அரிய உயிரைக் கவர்ந்து; அன்பின் துயான்வயின் - அன்பினாலே தூய சுக்கிரீவனிடத்து; அ அரசு ஈந்தவன் - அந்த அரசைக் கொடுத்த இராமபிரான்; (சுக்கிரீவனை) சுற்றும் சேனை மேயான் - சுற்றுகின்ற சேனையுடன் கூடியவனாய்; வருவான் என விட்டான் - வரும்படியாக என்று அனுப்பிவிட்டு; மேவுகாறும் - அவன் வரும் வரையிலும்; ஏயான் - அவனை ஏவிய இராமன்; திங்கள் இரண்டும் இரண்டும் - நான்கு மாதங்களும்; இடை - அந்த இருசிய முகமலையில்; இருந்தான் - தங்கியிருந்தான். இராமபிரான்ஆறுமாதம் பொறுத்திருந்ததாக ஒரு தனிப்பாடல் பேசுவதைஉலகம் அறியும். இராமன் 'இறையாறு திங்கள் இருந்தான் வாலிக்கிளையான்வரை' (பெருந் தொகை 1004) மழைக்காலத்தில் படையெடுப்புநிகழ்த்தக்கூடாது. சாதுர்மாசம் என்று பேசப்படும் விரதத்தை மேற்கொள்ளவேண்டும். சாதுர் மாசம் - நான்கு மாதம். சமணர்களும் பௌத்தர்களும் கூடஇவ்விரதத்தை அனுஷ்டித்ததாக வரலாறு பேசும். 'பெருமான் சுக்கிரீவன்பால்,திங்கள் நான்கில் விரசுக' என்று கேட்டுக் கொண்டதாகப் பேசப் பெற்றது(கம்ப. 4138) அம்மலை என்பது பலர் அறிசுட்டு. முன்பு ஒன்றைக் கூறாமலேஇச்சுட்டு அமையும். (93) |