இராமபிரான்வருத்தம் எண்ணிய சீதையின் நிலை கலிவிருத்தம் 5322. | அன்பினன்இவ் உரை உணர்த்த, ஆரியன் வன் பொறைநெஞ்சினன் வருத்தம் உன்னுவாள், என்பு உறஉருகினள்; இரங்கி ஏங்கினள்; துன்பமும்உவகையும் சுமந்த உள்ளத்தாள். |
அன்பினன் -அன்புவடிவாய அனுமன்; இவ் உரை உணர்த்த - இந்த மொழிகளைக் கூற (அதனால்); துன்பமும் - (பெருமான் உற்ற அவலத்தால்) கவலையையும்; உவகையும் - (பெருமான் தன்பால் கொண்ட காதலை அறிந்தமையால்) மகிழ்ச்சியையும்; சுமந்த - தாங்கிய; உள்ளத்தாள் - இதயத்தை உடைய பிராட்டி; வன்பொறை - வலிமை மிக்க பொறுமை உடைய;நெஞ்சினன் ஆரியன் - இதயத்தை உடைய இராமபிரானின்; வருத்தம்உன்னுவாள் - துன்பத்தை எண்ணி; என்பு உற உருகினள் - அத்துன்பம்எலும்பையும் தாக்க அதனால் கரைந்து; ஏங்கினள் - ஏக்கம் அடைந்தாள். உவகையும்துன்பமும் பிராட்டிபால் இருந்தது என்றான். இது கலவை மெய்ப்பாடு. இத்தகைய மெய்ப்பாட்டை உணர்த்துவதால் கவிச் சக்கரவர்த்தி உளவியலை வளப்படுத்துகிறார். என்புற உருகுதல், அனுபூதியின் முடிநிலை. கூம்பலங் கைத்தலத்து அன்பர் என்பூடுருகக் குவிக்கும் பாம்பலங்காரன் என்று கோவை பேசும். 'என்பு எனக்கு உருகுகின்றது' என்பான் அனுமன். ஆரியன் - மேலானவன். இராவணனும் இந்த அடைமொழி பெறுவான். குற்றாலத்தை ஆரிய நாடு என்று திரிகூடராசப்பர் பேசுவர். வன்பொறை நெஞ்சினன் - என்றது வன் பொறை நெஞ்சினன் ஆகி நம்மைக் கவனியான் என்று இருந்தோமே என்றது பழையவுரை (அடை - பதிப்பு) இவ்விருத்தம் விளம் - விளம் - மா - கூவிளம் என்னும் நான்கு சீர்களைப் பெற்று வரும். இத்தகு பாடல்கள் இந்நூலில் 2177 முறை கவிச்சக்கரவர்த்தியால் கையாளப்பட்டுள்ளன. (மணிமலர் 77) (95) |