5378. | 'வந்து எனைக் கரம் பற்றிய வைகல்வாய், "இந்த, இப்பிறவிக்கு இரு மாதரைச் சிந்தையாலும்தொடேன்" என்ற, செவ் வரம் தந்த வார்த்தைதிருச் செவி சாற்றுவாய். |
(இராமபிரான்) வந்து - மிதிலையை அடைந்து; எனை - என்னை; கரம் பற்றிய - திருமணம் செய்து கொண்ட; வைகல்வாய் - உடன் உறை காலத்தில்; இப்பிறவிக்கு - இந்த அவதாரத்தில்; இருமாதரை - இரண்டாவது பெண்னை; சிந்தையாலும் - மனத்தால் கூட; தொடேன் - தீ்ண்டமாட்டேன்; இந்த(ா) - (இவ்வுறுதியைப்) பெற்றுக் கொள்; என்ற - என்கின்ற; செவ்வரம் - செம்மையான வரத்தை; தந்த - வழங்கிய; வார்த்தை - செய்தியை; திருச் செவி சாற்றுவாய் - இராமபிரான் செவியில் மொழிக. இந்த இப்பிறவிஎன்பது போல் அமைந்த தொடர் கந்தபுராணத்தில் உள்ளது. இந்தா இஃது ஓர் இளங்குழவி என்றெடுத்து - ஈந்தனள் (வள்ளியம்மை 35) இரு மாதர் - என்பதற்கு. பூமி, நீளை என்று சமத்காரமாகக் கூறும் மரபும் உண்டு. 'தொடேன் என்று' என்னும் பாடம் சிறப்புடைத்து. இந்த இப்பிறவி என்னும் தொடருக்கு இந்த மானிடப் பிறவியில் என்று உரை கூறுவர். இரண்டு சுட்டு உறுதிப் பொருள் தந்தன என்பர். அவர்கள் இந்தவிப் பெயர் (இரணியன் 26) என்னும் பாடலை மேற்கோள் காட்டுவர் (அடை - பதி) அப் பதிப்பு, இரணிய வதைப் படலத்தில் 'எந்தை இப்பெயர்' என்னும் பாடத்தைக் கொண்டது அதிசயம். (34) |