5331. | எண் திசைமருங்கினும், உலகம் யாவினும், தண்டல் இல்உயிர் எலாம் தன்னை நோக்கின; அண்டம்என்றதின் உறை அமரர் யாரையும் கண்டனன்,தானும், தன் கமலக் கண்களால். |
எண்திசைமருங்கினும் - எட்டுத் திசைகளின்எல்லையிலும்; உலகம் யாவினும் - எல்லா உலகங்களிலும்; தண்டல் இல் - இடம் விட்டுப் பெயராத;உயிர் எலாம் - உயிர்க்கூட்டங்கள் முழுவதும்; தன்னை நோக்கின -அனுமனைப் பார்த்தன; தானும் - அந்த அனுமனும்; தன் - தன்னுடைய;கமலக் கண்களால் - தாமரை போலும் கண்களால்; அண்டம் என்றதின்உறை - மேலுலகம் என்று கூறப்படுவதில் வாழும்; அமரர் யாரையும் -எல்லாத் தேவர்களையும்; கண்டனன் - நேரே பார்த்தான். அனுமன் எல்லாஇடங்களிலும் வியாபித்து இருந்தமையால் உயிர்கள் அவனைக் கண்டன. உயர்ந்து இருந்தமையால் அவன் தேவரைக் கண்டான். இதனால் பெருக்கமும் உயரமும் பேசப்பட்டது. மருங்கு - எல்லை. 'மருங்கு அறிவாரா மலை' (கலி 48) இனியர் உரை காண்க. (104) |