5334. | 'முழுவதும் இவ் உருக் காண முற்றிய குழு இலது உலகு;இனி, குறுகுவாய்' என்றாள்,- எழுவினும் எழில்இலங்கு இராமன் தோள்களைத் தழுவினளாம் என,தளிர்க்கும் சிந்தையாள். |
எழுவினும் எழில்இலங்கு - கணைய மரத்தினும் அழகு விளங்கும்; இராமன் தோள்களை - இராமபிரானின் தோள்களை; தழுவினள் ஆம் என - அணைத்தவள் ஆவாள் என்று கூறும்படி; தளிர்க்கும் - பூரிக்கின்ற; சிந்தை - மனம் உடைய பிராட்டி (அனுமனை நோக்கி); இவ் உரு முழுவதும் காண - இந்த வடிவம் முழுவதையும் பார்ப்பதற்கு; உலகு முற்றிய - உலகம் முதிர்ச்சி பெற்ற; குழு இலது - கூட்டம் உடையதாக இல்லை (ஆகையால்); இனி - இப்போது; குறுகுவாய் - ஒடுங்குவாயாக; என்றாள் - என்று கூறினாள். தளிர்க்கும்மேனியாள் உலகில் குழு இலது குறுகுவாய் என்றாள் என முடிக்க. முற்றிய - முதிர்ந்த - ஈண்டு முதிர்ச்சி என்றது அறிவின் முதிர்ச்சியை. அனுமன் பேருரு தனக்குச் சிறைவீடு கிடைக்கும் என்னும் நம்பிக்கை உண்டு பண்ணுதலின் பிராட்டி பூரித்தாள். எழில் - எழுச்சி. இனி - இப்போது. இனி நினைந்து இரக்கம் ஆகின்று (புறம்) முற்றிய குழு என்பதற்கு வலிமை மிகுந்த சாமார்த்தியம் என்று பொருள் கூறுவாரும் உளர். (107) |