5335.

ஆண்தகைஅனுமனும், 'அருளது ஆம்' எனா,
மீண்டனன்,விசும்பு எனும் பதத்தை மீச் செல்வான்,
காண்டலுக்குஉரியது ஓர் உருவு காட்டினான்;
தூண்டல் இல்விளக்கு அனாள் இனைய
                                சொல்லினாள்.

     விசும்பு எனும் -ஆகாயம்என்று கூறப்படும்; பதத்தை மீச்
செல்வான் -
இடத்தையும் கடந்து மேலே செல்பவனான; ஆண்டகை
அனுமனும் -
ஆண்மை மிக்க அனுமனும்; (தான் கொண்ட பேர்உரு)
அருளதாம் எனா - தங்கள் திருவுள்ளத் தருளின்படி என்று கூறி;
மீண்டனன் - திரும்பி ஒடுங்கி; காண்டலுக்கு உரியது - காண்பதற்கு
எளிதான; ஓர் உருவு காட்டினான் - ஒரு வடிவத்தைக் காண்பித்தான்
(அப்போது); தூண்டல் இல் - தூண்டுதல் இல்லாத; விளக்கு அனாள் -
விளக்கை ஒத்த பிராட்டி; இனைய சொல்லினாள் - இந்த வார்த்தைகளைக்
கூறினாள்.

     பிராட்டி அடங்குகஎன்று கூறிய ஆணையை அருள் என்றான்.   (108)