அறுசீர்விருத்தம் 5336. | இடந்தாய் உலகை மலையோடும், எடுத்தாய் விசும்பை இவை சுமக்கும் படம் தாழ் அரவைஒரு கரத்தால் பறித்தாய், எனினும், பயன் இன்றால்; நடந்தாய் இடையேஎன்றாலும், நாண் ஆம் நினக்கு; நளிர் கடலைக் கடந்தாய்என்றல் என் ஆகும் ?-காற்றாம் அன்ன கடுமையாய் ! |
காற்று ஆம்அன்ன - காற்றைப் போலும்; கடுமையாய் - வேகமுள்ள அனுமனே; (நீ) மலையோடும் - மலைகளுடனே; உலகை - உலகத்தை; இ்டந்தாய் - பெயர்த்து எடுத்தாய்; விசும்பை - ஆகாயத்தை; எடுத்தாய் - தூக்கினாய்; இவை சுமக்கும் - மலை முதலாய இவற்றைத் தாங்கும்; படம் தாழ் அரவை - படங்கள் வளைந்திருக்கும் ஆதிசேடனை; ஒரு கரத்தால் பறித்தாய் - ஒரு கரத்தால் களைந்தெடுத்தாய்; எனினும் - என்றாலும்; பயன் இன்று - (அவை உன் ஆற்றலுக்குத் தக்க பயன் இல்லை; இடையே - கடலின் நடுவில்; நடந்தாய் என்றாலும் - நடந்து வந்தாய் என்று பேசப்பட்டாலும்; (அது) நினக்கு நாணாம் - உனக்கு நாணத்தை உண்டாக்கும்; (அங்ஙனம் இருக்க) நளிர் கடலை - பெரிய கடலை (நீ); கடந்தாய் என்றல் - தாண்டினாய் என்றாலும்; என்னாகும் - அது உனக்கு எச்சிறப்பை உண்டாக்கும். இடத்தல் -பெயர்த்தெடுத்தல். எடுத்தல் - சுமத்தல். இடந்தது பூமி எடுத்தது குன்றம் (முதல் அந்தாதி 39) படம் தாழ் - படம் வளைந்த - தாழ்குரல் ஏனல் (புறப்பொருள் பெருந்திணை 16) காற்றாம் - ஆம் சாரியை. (வி.கோ) கடுமையாய் - வேகம் உடையவனே. உன் சிறப்பு முற்றும் வெளிப்படுத்தற்கு உலகு இடத்தல் முதலானவை போதா. அனுமன் ஆற்றலுக்கு உலகை இடத்தல் முதலானவை சிறுசெயல். அவை பயனற்ற செயல். சிறந்த வீரம் அநியாயத்தை அழிக்கும் போதே பயனுடையதாகின்றது என்பது குறிப்பு. இவ்விருத்தம் மா-மா-காய்- மா-மா-காய் என்னும் 6 சீர்களை முறையே பெற்று வரும். இவ்விருத்தம் கம்பனால் 110 முறை கையாளப்பட்டுள்ளது. (109) |