5337.

'ஆழி நெடுங் கை ஆண்தகைதன் அருளும், புகழும்,
                                அழிவு இன்றி,
ஊழி பலவும்நிலைநிறுத்தற்கு, ஒருவன் நீயே உளை
                                ஆனாய்;-
பாழி நெடுந்தோள் வீரா !-நின் பெருமைக்கு ஏற்ப,
                                பகை இலங்கை
ஏழு கடற்கும் அப்புறத்தது ஆகாதிருந்தது இழிவு
                                அன்றோ ?

     பாழிநெடுந்தோள் - பருத்து நீண்டதோள்களை உடைய; வீரா !-
அனுமேன நீ; ஆழி நெடுங்கை - சக்கரம் ஏந்தும் கரத்தைப் பெற்ற; ஆண்
தகை தன் -
ஆடவருள் சிறந்த இராமபிரானின்; அருளும் - அருளும்;
புகழும் - புகழும்; அழிவு இன்றி - அழிவு
 அடையாமல்; ஊழிபலவும் -
பல யுகங்களும்; நிலை நிறுத்தற்கு - நிலைத்துநிற்பதற்கு; ஒருவன் நீயே -
ஒப்பற்ற நீயே; உளை ஆனாய் - (தகுதி)உள்ளவன் ஆனாய்; நின்
பெருமைக்கு ஏற்ப -
உன்னுடைய விசுவரூபத்துக்குப் பொருத்தமாக; பகை
இலங்கை -
உலகத்தின் பகையான இலங்கையானது; ஏழு கடற்கும் - ஏழு
சமுத்திரங்களுக்கும்; அப் புறத்தது - அப்பால் இருப்பதாக; ஆகாதது -
அமையாமல்; இருந்தது - (ஒரு கடலின் நடுவில்) இருப்பது; இழிவு அன்றோ
-
(உன் சிறப்புக்கு) தாழ்வு அல்லவா.

     அனுமனின்வீரத்துக்கு 'உரைகல்' ஒரு கடல் கடந்ததன்று. அவன் ஏழு
கடலைக் கடந்தால்தான் அவன் வீரம் சரியாக உணரப்படும் என்பது குறிப்பு.
                                                         (110)