5340.

'மாண்டேன்எனினும் பழுது அன்றே; இன்றே, மாயச்
                                 சிறைநின்றும்
மீண்டேன்;என்னை ஒறுத்தாரைக் குலங்களோடும்
                             வேர் அறுத்தேன்,
பூண்டேன் எம்கோன் பொலங் கழலும்; புகழே
                            அன்றி, புன் பழியும்
தீண்டேன்'என்று, மனம் மகிழ்ந்தாள், திருவின்
                         முகத்துத் திரு ஆனாள்.

     திருவின்முகத்துத் திரு அன்னாள் - திருமகளின் முகத்தில் உள்ள
செல்வம் போலும் பிராட்டி (அனுமனை நோக்கி); இன்றே - இன்றைய
தினமே; மாயச்சிறை நின்றும் - மாயை போன்ற சிறையிலிருந்து; மீண்டேன்
-
திரும்பியவள் போன்றுள்ளேன்; என்னை ஒறுத்தாரை - என்னைத்
துன்புறுத்திய அரக்கர்களை; குலங்களோடு - அவர்களுடைய சுற்றங்களுடன்;
வேர் அறுத்தேன் - அடியோடு தொலைத்து விட்டவள் ஆவேன்; எம்
கோன் -
எம்பிரானாகிய இராமபிரானின்; பொலங்கழலும் - வீரக் கழல்
அணிந்த திருவடியை; பூண்டேன் - தலையில் சுமந்தவள் ஆனேன்; புகழே
அன்றி -
புகழையே அல்லாமல்; புன் பழியும் - அற்பப் பழிச் சொல்லையும்;
தீண்டேன் - தீண்டமாட்டேன் (ஆகையால்) (இனி); மாண்டேன் எனினும் -
இறந்துபட்டாலும்; பழுது அன்று - (என் ஆன்மாவுக்குக்) குறைவு இல்லை;
என்று - என்று கூறி; மகிழ்வுற்றாள் - மகிழ்ச்சியடைந்தாள்.

     மாயச்சிறை -மாயைபோலும் சிறை. திருவின் முகத்துத் திரு - என்ற
தொடர் திருமங்கையாழ்வாரின் பாசுரத்தை அடிப்படையாகக் கொண்டது.
திருவுக்கும் திருவாகிய செல்வா (7.7.1) என்பது பெரிய திருமொழி. திருமாலின்
சாரம் திருமகள்; திருமகளின் சாரம் சிறையிருந்த செல்வி என்க. திருமகள்
அருளுடையவள். பிராட்டி அருளே வடிவமானவள். என்பது குறி்ப்பு. அருளது
சக்தி என்று சித்தி பேசும். சக்தி - சாரம்.                       (113)