5341. | அண்ணற் பெரியோன், அடிவணங்கி, அறிய உரைப்பான், 'அருந்ததியே ! வண்ணக்கடலினிடைக் கிடந்த மணலின் பலரால், வானரத்தின் எண்ணற்கு அரியபடைத் தலைவர், இராமற்கு அடியார்; யான் அவர்தம் பண்ணைக்கு ஒருவன்எனப் போந்தேன்; ஏவல் கூவல் பணி செய்வேன். |
(பிராட்டியின் மொழிகேட்டு) அண்ணல்பெரியோன் - சிறப்புமிக்க அனுமன்; அடிவணங்கி - பிராட்டியின் திருவடிகளிலே வணங்கி; அறிய - வானரப் படையின் பெருமைகள் அறியும்படி; உரைப்பான் - கூறலானான்; அருந்ததியே - அருந்ததி போலும் அம்மையே; எண்ணற்கு அரிய - அளவிட முடியாத; வானரத்தின் படைத்தலைவர் - வானரப் படையின் தலைவர்கள்; இராமற்கு அடியார் - இராமபிரானின் தொண்டர்கள் ஆவார்கள்; (அப்படைத்தலைவர்கள்) வண்ணக் கடலின் இடை - அழகிய கடலின் கண்ணே; கிடந்த மணலின் பலர் - கிடக்கின்ற மணலினும் பலராவார்; யான் - நான்; அவர்தம் பண்ணைக்கு - அவர்களுடைய கூட்டத்துக்கு; ஒருவன் என - ஒருவேலைக்காரன் என்று கூறிக் கொண்டு; போந்தேன் - இங்கு வந்தேன்; (யான்) ஏவல் கூவல் பணி செய்வேன் - ஏவும் பணியையும் கூவும் பணியையும் செய்வேன். யான் சுயமாகச்சிந்தித்துப் பணி செய்பவன் அல்லேன். பிறர் ஏவிய பணியைச் செய்பவன் என்று அனுமன் தன் பணிவு தோன்றக் கூறினான். தன்னைக் தாழ்த்துவதன் மூலம் வானரவீரர்களின் சிறப்புப் பேசுவதால் பிராட்டிக்குத் தன்னம்பிக்கை வளர்ந்தது. கடல் கடந்து அரக்கர்களை வெல்லும் வலிமை எவர்க்குண்டு என்ற பிராட்டியின் தளர்ச்சிபோக அனுமன் கொடுத்த மருந்து, இப்பாடல். சஞ்சீவி மருந்தே இந்தப் பாடலாக வடிவம் கொண்டது. ஏவற் கூவற்பணி செய்வேன்' என்று பாடம் கொண்டு, ஒருவன் ஏவ, அவன் ஒருவனை ஏவ அவன் செய்வது ஒத்தவன் நான் என்று பழைய உரை உள்ளது (அடை - பதிப்பு) (114) |