5342. | 'வெள்ளம் எழுபது உளது அன்றோ வீரன் சேனை ? இவ் வேலைப் பள்ளம், ஒரு கை நீர் அள்ளிக் குடிக்க, சாலும் பான்மையதோ ? கள்ள அரக்கர் கடி இலங்கை காணாது ஒழிந்ததால் அன்றோ, உள்ள துணையும்உளது ஆவது ? அறிந்தபின்னும் உளது ஆமோ ? |
வீரன் சேனை -இராமபிரானின் சேனை; எழுபது வெள்ளம் உளது அன்றோ - எழுபது வெள்ளம் ஆக இருக்கிறதல்லவா; பள்ளம் - ஆழமான; இ வேலை - இந்தக் கடலானது (அச்சேனை); ஒரு கை நீர் - ஒரு கையளவான தண்ணீரை; அள்ளிக் குடிக்க - அள்ளிப் பருக; சாலும் பான்மையதோ - போதுமான இயல்பை உடையதா; கள்ள அரக்கர் - வஞ்சகம் உடைய அரக்கர்களின்; கடி இலங்கை - காவலுடன் கூடிய இலங்கையானது (உள்ள இடம்); காணாது - இராமபிரானால் அறியப்படாமல்; ஒழிந்ததால் அன்றோ - விலகியிருந்ததால் அல்லவா; உள்ளதுணையும் - காணாமை உள்ள அளவும்; உளது ஆவது - இருப்பதாய் இருக்கிறது; அறிந்த - அறியப்பட்டால்; பின்னும் - மறுபடியும்; உளதாமோ - அழியாமல் இருக்குமா. சேனையைக்குறிக்கும் பேரெண் வெள்ளம். எட்டு மாகடல் கொண்டது வெள்ளம் என்று கையேடு குறிக்கிறது. வானர சேனை எழுபது வெள்ளம். 'ஏற்ற வெள்ளம் எழுபதின் இற்ற' என்றும் 'வெள்ளம் ஓர் ஏழுபத்து' என்றும் (கம்ப. 4448, 6974) குரக்குச் சேனை குடித்தாலே கடல் வற்றும் என்க. இதுவும் என்பதில் உள்ள 'உம்' அசை. (குறள் 1164 உரை) இந்தக் கடலைக் கண்டு அஞ்ச வேண்டா என்பது குறிப்பு. (115) |