5348. | 'அறிந்து,இடை, அரக்கர் தொடர்வார்கள் உளராமேல் முறிந்து உதிரநூறி, என் மனச் சினம் முடிப்பேன்; நெறிந்த குழல் !நின் நிலைமை கண்டும், நெடியோன்பால், வெறுங் கைபெயரேன் - ஒருவராலும் விளியாதேன். |
நெறிந்த குழல் !- சுருண்டகூந்தலையுடைய அம்மையே !; அறிந்து -(யான் உன்னைச் சுமந்து போவதை) தெரிந்து; இடை தொடர்வார்கள் அரக்கர் - இடையிலே என்னைத் தொடரும் அரக்கர்கள்; உளராமேல் - இருப்பார்களேயானால்; முறிந்து உதிர நூறி - அரக்கர்கள் சிதைந்து உதிரும்படி அழித்து; என் மனச் சினம் - என் உள்ளத்தில் உள்ள சீற்றத்தை; முடிப்பேன் - தணித்துக் கொள்வேன்; ஒருவராலும் விளியாதேன் - ஒருவராலும் சாகாவரம் பெற்ற நான்; நின் நிலைமை கண்டும் - உன்னுடைய துன்ப நிலையைப் பார்த்தும்; (அதற்குப் பரிகாரம் தேடாமல்) நெடியோன் பால் - இராமபிரான் பக்கல்; வெறுங்கை பெயரேன் - வெறுங்கையுடன் போகமாட்டேன். உளராமேல்என்றதனால் அரக்கர் பின்பற்றி் வாரார் என்று அனுமன் கருதினான். சினம் அரக்கர்களின் கொடுஞ்செயலால் வந்தது. ஒருவராலும் விளியா வரம் பெற்றது நன்மையைச் செய்யவும் தீமையை அழிக்கவுமே என்று அனுமன் தன் மனக் கருத்தை உணர்த்தினான். நெறிந்த குழல் - சுருண்ட கூந்தல். நெறிந்த கருங்குழல் மடவாய் (பெரியாழ்வார் 3. 10. 1) நின் நிலைமை என்றது, பிராட்டி பிறருடைய உதவியின்றித் தவிக்கும் நிலைமை. இதனை 'உண்டு துணை என்ன எளிதோ' (கம்ப. 5345) என்று முன்பே பேசப் பெற்றது. (4) |