5349. | ' "இலங்கையொடும் ஏகுதிகொல்" என்னினும், இடந்து, என் வலம்கொள் ஒருகைத்தலையில் வைத்து, எதிர் தடுப்பான் விலங்கினரைநூறி, வரி வெஞ் சிலையினோர்தம் பொலங் கொள்கழல் தாழ்குவென்; இது, அன்னை ! பொருள் அன்றால். |
அன்னை ! -தாயே(நீ); இலங்கையொடும் ஏகுதி - இலங்கையுடன் என்னைக் கொண்டு செல்; என்னினும் - என்று கட்டளையிட்டாலும்; இடந்து - (இலங்கையை) பெயர்த்து (அதனை); என் - என்னுடைய; வலம்கொள் - வலிமை கொண்ட; ஒரு கைத் தலையில் - ஒரு கையின் கண்ணே; வைத்து -வைத்துக் கொண்டு; எதிர் - என் முன்னே; தடுப்பான் - தடுக்கும் பொருட்டு;விலங்கினரை - குறுக்கிடுபவரை; நூறி - அழித்து (பிறகு); வரி - கட்டமைந்த; வெம்சிலையினோர்தம் - கொடிய வில்லேந்திய இராமலக்குவர்களின்; பொலங்கொள் கழல் - அழகிய வீரக்கழல் அமைந்த திருவடியை; தாழ்குவென் - வணங்குவேன்; இது - இச் செயல் (எனக்கு); பொருள் அன்று - பெருஞ்செயல் அன்று. (எளிய செயல்). இச்செயல் எனக்குஅருஞ்செயல் அன்று. எளிய செயல், என்னும் ஆழ்ந்த கருத்தை உட்கொண்ட 'பொருள் அன்று' என்னும் தொடர் ஆழமானது. மணிவாசகர் 'பொருளா, என்னை புகுந்தாண்ட பொன்னே ! என்பர் (திருவாசகம் 383)' நிற்கு இது பொருள் என உணர்கிலேன்' என்று இராமனைக் கவுசிகன் பாராட்டுவான் (கம்ப. 449) (5) |