5350.

'அருந்ததி! உரைத்தி-அழகற்கு அருகு சென்று,
                                       "உன்
மருந்து அனையதேவி, நெடு வஞ்சர் சிறை
                                    வைப்பில்,
பெருந்துயரினோடும், ஒரு வீடு பெறுகில்லாள்,
இருந்தனள்" எனப்பகரின், என் அடிமை என் ஆம் ?

     அருந்ததி -அருந்ததியே (யான்); அழகற்கு அருகு சென்று -
இராமபிரான் பக்கலிலே போய்; உன் - உன்னுடைய; மருந்து அனைய தேவி
-
அமுதம் போலும் தேவியானவள்; நெடு வஞ்சர் - மிக்க வஞ்சகக்
குணமுடையவர்களின்; சிறை வைப்பில் - சிறையிடத்தில்;
பெருந்துயரினோடும் -
பெரிய துன்பத்துடன்; ஒரு - ஒப்பற்ற; வீடு
பெறுகில்லாள் -
விடுதலை பெறாதவளாய்; இருந்தனள் - இருந்தாள்; எனப்
பகரின் -
என்று கூறினால்; என்
அடிமை - என்னுடைய தொண்டு;என்
ஆம் -
என்ன பயனுடையதாகும்.

     செயலாகவெளிப்படாத தொண்டு பயனில்லை என்பது குறிப்பு. அருந்ததி
போல்வாளை அருந்ததி என்றது ஆகுபெயர். இராமன் என்னும் சொல்
அழகன் என்று தமிழ் வடிவம் பெறுகின்றது. வீடு விடுதலை. 'வீடு பெறல் யாது
என விலங்கிழைவினவ' (பெருங்கதை) 5-3-107) நெடுவஞ்சகர் - பெரிய
வஞ்சகர். நெடு என்பது பெரிது என்னும் பொருள் தரும். 'நெடுவஞ்சமும்,
பாவமும் பொய்யும் வல்லநாம்' (கம்ப. 7356) நெடு என்பதைச் சிறைக்கு
அடைமொழியாக்கி நீண்ட சிறை என்று உரை கூறினாரும் உளர். என் அடிமை
என்னாம் என்ற இடத்து 'அடிமை சால அழகுடைத்தே' என்னும் திருவாசகம்
நினைக்க.                                               (6)