5356.

'அரியது அன்று; நின் ஆற்றலுக்கு ஏற்றதே;
தெரிய எண்ணினை;செய்வதும் செய்தியே;
உரியது அன்று எனஓர்கின்றது உண்டு, அது, என்
பெரிய பேதைமைச்சில் மதிப் பெண்மையால்.

(அனுமனே !) (நீகூறியது)

     அரியது அன்று- உன்னால் செய்ய முடியாததல்ல (அஃது); நின்
ஆற்றலுக்கு ஏற்றதே -
உன்னுடைய வலிமைக்கும் பொருத்தமானதே; தெரிய
எண்ணினை -
விளக்கமாக ஆராய்ந்தாய்; (அச் செயலை) செய்வதும்
செய்தியே -
செய்வாய்; (ஆனால்) பெரிய பேதைமை - மிக்க
அறியாமையும்; சின்மதி - குறைந்த அறிவும்
 பெற்ற; பெண்மையால் -
பெண்மைத் தன்மையால்; அது - அச்செயல்; உரியது அன்று என - ஏற்ற
செயல் அன்று என்று; ஓர்கின்றது - அறியும் பண்பு; உண்டு - என்பால்
உள்ளது.

     அனுமன் ஆற்றலுக்குஏற்ற அனைத்தும் செய்வான். ஆனால் பெண்மை
இடையே தடை விதிக்கிறது. பெரிய பேதைமை, சின்மதி என்பவை
பிராட்டியின் அடக்கத்தால் வந்த மொழிகள். பிறரின் அறியாமையைத் தன்
அறியாமையாகக் கூறிக் குறிப்பிக்கும் பாங்கு எதிர்மறைத் தொனியைச்
சார்ந்தது. அவன் பெரியவன் என்ற தொடர் திரும்பத் திரும்பப் பேசப்பட்டு
அது வேறு பொருள் பயந்தது, என்பதைச் சீசர் நாடகத்திற் காண்க. செய்வதும்
செய்தி - என்பது செய்தலைச் செய்வாய் என்னும் பொருள் தந்தது.
'உண்ணலும் உண்ணேன்; வாழலும் வாழேன்' கலித்தொகை பேசும். (பாலை 22)
மயிலைநாதர், இவற்றை ஒருபொருட்பன்மொழி என்பர். இனியர் காரிய வாசகம்
என்பர் (தொல் 113) செய்தலும் செய்தியே என்பதற்கு இ.கோ.பிள்ளை
அவர்கள் செய்தாலும் செய்வாய் - என்று விரித்தார். இன்று படித்தாலும்
படித்தேன். இதுபோல் படித்தாலும் படித்தேன். இதுபோல் படித்ததில்லை
என்பன போன்ற உலக வழக்கு இ்ங்கே தோன்றுகிறது.              (12)