5357. | 'வேலையின்னிடையே வந்து, வெய்யவர், கோலி, நின்னொடும் வெஞ் சரம் கோத்தபோது, ஆலம்அன்னவர்க்கு அல்லை, எற்கு அல்லையால்; சாலவும் தடுமாறும்; தனிமையோய் ! |
(அனுமனே !) (நீஎன்னைச் சுமந்து போகும் போது) வெய்யவர் -கொடிய அரக்கர்கள்; வேலையின் இடையே வந்து - கடலுக்கு நடுவே வந்து; கோலி - உன்னை வளைத்துக் கொண்டு; நின்னொடும் - உன்னுடன்; வெம்சரம் கோத்தபோது - கொடிய அம்புகளை வில்லில் தொடுத்துப் போர் புரியும்போது; ஆலம் அன்னவர்க்கு அல்லை - விடம் போன்றவர்களுடன் போர் புரிவதற்கும் ஏற்றவனாகாய்; எற்கு அல்லை - என்னைப் பாதுகாப்பதற்கும் உரியவனாகாய்; சாலவும் - மிகவும்; தடுமாறும் - (எதைச் செய்வது எதைத்தவிர்ப்பது என்று) சஞ்சலம் அடையும்; தனிமையோய் - தனிமை உடையவனாவாய். அரக்கருடன்போர் செய்தால் என்னைப் பாதுகாக்க இயலாது. என்னைப் பாதுகாத்தால் அரக்கர்களால் பேரிடர் உண்டாகும். ஆகையால் உன் எண்ணம் முறையன்று என்று பிராட்டி பேசினாள். 'அத்தலைக்குஅல்லேன்... இத்தலைக்கு அல்லேன்' (கம்ப. 8213) என்று வீடணன் புலம்பியது நினைவுக்கு வரும். கோலி - வளைத்து அல் - அசை. (13) |