5358.

'அன்றியும், பிறிது உள்ளது ஒன்று; ஆரியன்
வென்றி வெஞ்சிலை மாசுணும்; வேறு இனி
நன்றி என் ?பதம் வஞ்சித்த நாய்களின்
நின்ற வஞ்சனை,நீயும் நினைத்தியோ ?

(உன் செயல் ஏற்றதுஅன்று அன்பதற்கு)

    அன்றியும்  -இது அல்லாமலும்; பிறிது ஒன்று உளது - வேறு ஒரு
காரணம் இருக்கிறது (உன் செயலால்); ஆரியன் - இராமபிரானின்; வென்றி
வெஞ்சிலை -
வெற்றிமிக்க கோதண்டம்; மாசுணும் - களங்கம் அடையும்;
இனி வேறு - (உளது) மேல்வேறு; நன்றி என் - நன்மை என்ன ?; பதம் -
சோற்றை; வஞ்சித்த - ஏமாற்றி உண்ணும்; நாய்களின் - நாய்களைப் போல
என்னை வஞ்சித்துக் கவர்ந்த அரக்கரிடத்து; நின்ற வஞ்சனை - நிலைத்த
வஞ்சகத்தை; நீயும் நினைத்தியோ - நீயும் கருதுகின்றாயா.

     வஞ்சம் என்றதுபிறரை ஏமாற்றிச் செய்யும் செயலை நான், உன்
செயலுக்கு உடன்பட்டால் அஃது இராமபிரான் வில்லுக்குக் களங்கம்
உண்டாகும். வில்லுக்கே அன்றி உனக்கும் மாசு உண்டாகும். வஞ்சகத்தை
வஞ்சகத்தால் வெல்வது உன் போன்ற சான்றோர்கட்கு அழகு அன்று, என்று
பேசுகின்றாள். சிலை தனக்கு உரிய செயல் செய்யாமையால் அது மாசு
அடையும். அனுமன் தனக்கு உரியதல்லாதவற்றைச் செய்வதால் மாசு
அடைவான் என்க.                                        (14)