5360.

'வெற்றி நாணுடை வில்லியர் வில் தொழில்
முற்ற, நாண் இல்அரக்கியர், மூக்கொடும்
அற்ற நாணினர்ஆயின போது அன்றி,
பெற்ற நாணமும்பெற்றியது ஆகுமோ ?

     வெற்றி நாணுடைவில்லியர் - வெற்றியையும் நாணையும்பெற்ற
வில்லேந்திய இராமலக்குவர்களின்; வில்தொழில் முற்ற - வில்லாற்புரியும்
போர்த்தொழில் முதிர்ச்சியடைய (அதனால்); நாண் இல் அரக்கியர் -
நாணமற்ற அரக்கிகள்; மூக்கொடும் - மூக்குடனே; அற்ற - அறுபட்ட;
நாணினர் ஆயின போதன்றி -
மங்கல நாணை உடையவரான போதே
அல்லாமல்; பெற்ற நாணமும் - யான் பெற்ற நாணமும்; பெற்றியது
ஆகுமோ -
சிறப்புடையதாகுமோ;

     பகைவர்களின்மனைவிமார்களின் மூக்கை அறுத்தல் சிறப்புப் போலும் !
விளங்கு முடி கவித்த வீரசலாமேகன், போர்க்களத்து அஞ்சித் தன்
கார்க்களிறிழிந்து, கவ்வையுற்றோடக் காதலியொடும் தன் தவ்வையைப்
பிடித்துத் தாயை மூக்கரிய' என்று இராசகேசரி வர்மனின் மெய்க்கீர்த்தியும்
'நாகலை என்னும் தோகையஞ்சாயலை முகத்தொடு மூக்கு வேறாக்கி' என்று
வீரராசேந்திர தேவனின் மெய்க்கீர்த்தியும் பேசும். பிராட்டி, சிறையில் பட்ட
அவமானங்கள் இங்ஙனம் பேசச் செய்தன.                        (16)