5363. | 'வேறும் உண்டு உரை;கேள் அது; மெய்ம்மையோய் ! ஏறு சேவகன் மேனிஅல்லால், இடை ஆறும் ஐம்பொறிநின்னையும், "ஆண்" எனக் கூறும்; இவ் உருத்தீண்டுதல் கூடுமோ ? |
மெய்ம்மையோய்- உண்மையின் வடிவமானவளே; உரை வேறும் உண்டு - (இவை தவிர) சொல்லும் சொல் வேறு ஒன்றும் உள்ளது; அது கேள் - அதைக் கேட்பாயாக; ஏறு சேவகன் - வளரும் வீரத்தைப் பெற்ற இராமபிரானின்; மேனி அல்லால் - திருமேனியை அல்லாமல்; இடை - (உன்னுடைய விரதங்களால்) தோற்றுப்போய்; ஆறும் - அவிந்துபோன; ஐம்பொறி நின்னையும் - ஐம் பொறிகளைப் பெற்ற உன்னையும்; (இந்த உலகம்) ஆண் எனக் கூறும் - ஆண் என்று பேசும்; (ஆதலின்) இவ் உரு - இந்த மேனியை; தீண்டுதல் கூடுமோ - தொடுவது தகுமா. அனுமனே நீபிரம்மசரிய விரதத்தால் ஐந்து பொறிகளையும் அடக்கியுள்ளாய். அதனால், நீ, ஆண்பால் பெண்பால் என்னும் பகுப்பைக் கடந்தவனாவாய். ஆனால் உலகம் உன்னை ஆண் என்று கூறுகிறது. ஆதலின் உன் மேனியைத் தீண்டுவது தகாது. குறிக்கோளே அன்றி, அதை அடையும் நெறியும் தூய்மையாக இருத்தல் வேண்டும். என்று கூறும் காந்தியடிகளே அம்மையைப் பூரணமாக அறிவர். பிராட்டி, தன் மொழியால் அனுமன் மனம் வருந்துவானோ என்று தயங்கி தயங்கிப் பேசுவதைக் கவிதை நடையிற் காணலாம். (19) |