5366. | 'அன்ன சாவம் உளது என, ஆண்மையான், மின்னும்மௌலியன், மெய்ம்மையன், வீடணன் கன்னி,என்வயின் வைத்த கருணையாள், சொன்னது உண்டு,துணுக்கம் அகற்றுவான். |
ஆண்மையான் -ஆண்மைஉடையவனும்; மின்னும் மௌலியன் - ஒளிவீசும் முடியைத் தரித்தவனும்; மெய்ம்மையன் - உண்மையானவனும் (ஆன); வீடணன் கன்னி - வீடணனின் மகளான திரிசடையானவள்; என் வயின் வைத்த கருணையாள் - என்னிடத்தில் கொண்ட இரக்கத்தாள்; துணுக்கம் அகற்றுவான் - என்னுடைய நடுக்கம் நீங்குவதற்காக; அன்ன சாபம் உளது என - அந்தச் சாபம் உள்ளது என்று; சொன்னது உண்டு - கூறியது என் உள்ளத்தில் தங்கியுள்ளது. திரிசடை கூறியகனவை அறிந்ததால், பிராட்டி வீடணன் இலங்கை அரசு பெறுவான் என்று உணர்ந்து மௌலியன் என்று கூறினாள். திரிசடையின் பண்பு. வீடணனின் மகளாக இருப்பதால் அமைந்தது என்று தெளிந்து அவளை ஆண்மையான், மெய்ம்மையான் என்று புகழ்ந்தாள். வித்தும் முளையும் வேறன்று என்று குமரகுருபர் பேசுவார். இராவணனின் கொடுங்கோலை எதிர்த்த காரணத்தால் அவனே மிகமிக மதிக்கத் தக்கவன். திரிசடை இந்த ரகசியத்தைக் கூறியதற்குக் காரணம் அபலையின் துன்பம் நீங்கவேண்டும் என்னும் கருணையே. உண்டு என்பதைத் துணை வினையாக்கிச் சொன்னதுண்டு என்று, ஒரே தொடராக்கினும் அமையும். (22) |