5367. | 'ஆயது உண்மையின், நானும்-அது அன்று எனின், மாய்வென்மன்ற;-அறம் வழுவாது என்றும், நாயகன் வலிஎண்ணியும், நானுடைத் தூய்மைகாட்டவும், இத்துணை தூங்கினேன். |
ஆயது உண்மையின்- இந்தச்சாபம் இருத்தலினால்; நானும் - பிறருடைய உதவியைப் பெறாத யானும்; அறம் வழுவாது என்றும் - தருமம் என்னைக் காப்பதில் பின்னடையாது என்று நினைத்தும்; நாயகன் வலி எண்ணியும் - இராமபிரானின் ஆற்றலை நினைத்தும்; நான் உடைத் தூய்மைகாட்டவும் - என்னுடைய தூய்மையை உலகத்துக்குஉணர்த்தவும்; இத்துணை - இத்தனை நாட்கள்; தூங்கினேன் - (இறவாமல்) தாமதித்தேன்; அது அன்றெனில் - அச்சாபம் உண்மை அல்லாமற் போனால்; மன்ற மாய்வென் - நிச்சயமாக இறந்திருப்பேன். ஆயதுஉண்மையினானும் என்று பிரித்து பொருள் சொன்னார் சிலர் நானும் என்பதில் உள்ள 'உம்' மும் அசையானால் வாக்கியம் பிழை நேராது. உம் அசையாக வருதலை சிந்தாமணி 1173 ஆம் பாடல் உணர்த்தும். சாபம் உண்மையாக இருப்பினும் பொய்மையாக இருப்பினும் யான் மாய்வென். ஆனால் இராமபிரானின் வலிமை எண்ணி, என்னுடைய தூய்மையைக் காட்ட இறவாமல் காலதாமதம் செய்தேன் என்ற பொருள் கொள்ள வேண்டும். தருமத்தை நான் காப்பாற்ற வேண்டா, பிராட்டி பேசியதாகப் பொருள் கொள்ள வேண்டும். என்னுடை என்று வரவேண்டியது நானுடை என்ற வந்தது. 'நானுடைத் தவத்தால்' என்று திருமங்கையாழ்வாரும், நானுடை எம்பெருமான் என்று சுந்தரரும் பாடினர். (23) |