5368. | 'ஆண்டுநின்றும், அரக்கன் அகழ்ந்து கொண்டு, ஈண்டுவைத்தது, இளவல் இயற்றிய நீண்ட சாலையொடுநிலைநின்றது; காண்டி, ஐய !நின் மெய் உணர் கண்களால். |
ஆண்டு நின்று -அந்தப்பஞ்சவடியிலிருந்து; அரக்கன் - இராவணனால்; அகழ்ந்து கொண்டு - பெயர்த்துக் கொண்டு வந்து; ஈண்டு வைத்தது - இந்த இலங்கையில் வைக்கப்பெற்ற பூமியானது; இளவல் இயற்றிய - இளைய பெருமானால் அமைக்கப்பெற்ற; நீண்ட சாலையொடு - பெரிய பர்ணசாலையுடன்; நிலை நின்றது - நிலையாக இருப்பதை; ஐய - தந்தையே; நின் - உன்னுடைய; மெய் உணர் கண்களால் - சத்தியத்தைத் தரிசிக்கும் விழிகளாலே; காண்டி - பார்ப்பாயாக. அரக்கன், இளவல்இயற்றிய சாலையொடு அகழ்ந்து கொண்டு ஈண்டு வைத்தது. (அது) நிலை நின்றது. காண்டி என்றும் கூட்டிப் பொருள் கூறலாம். 'தம்பியால் சமைக்கப்பட்ட இனிய பூஞ்சாலை (கம்ப. 2738) சூர்ப்பணகைப் படலம் பேசும். இங்கு அதனை பிராட்டி மறவாமல் பேசினாள். இலக்குவன் அமைத்த சாலையைச் சித்திரகூடத்தில் கண்டோம். அது 'தம்பி கோலிய சாலை' என்று பேசிற்று. அங்கு (கம்ப. 2089 - 2092) நான்கு பாடல்கள் அதை விவரிக்கும். (24) |