5370.

'ஆதலான், அது காரியம் அன்று; ஐய !
வேதநாயகன்பால், இனி, மீண்டனை
போதல்காரியம்' என்றனள் பூவை; அக்
கோது இலானும்,இனையன கூறினான்;

     ஐய - ஐயனே; ஆதலால்- ஆகையாலே; அது - (என்னைச் சுமந்து
போக எண்ணிய) செயல்; காரியம் அன்று - செய்யத் தக்கது அன்று; இனி -
இப்போது;  வேத நாயகன் பால் - வேதத்தின் தலைவனான இராமபிரான்
பக்கலில்; மீண்டனை போதல் - திரும்பிச் செல்வது; காரியம் என்றனள் -
செய்யத் தக்கது என்று கூறினாள்; பூவை - பிராட்டி; அக்கோது இலானும் -
குற்றம் இல்லாத அந்த அனுமன்; இனையன கூறினான் - இந்த
வார்த்தையைக் கூறினான்.

     காரியம் -செய்யத்தக்கது. மீண்டனை போதல் மீண்டு போதல்.
மீண்டனை என்னும் முற்று எச்சப் பொருளில் வந்தது. 12 பாடல் முதல் 26
பாடல் வரை பிராட்டி அனுமன் தன்னைச் சுமந்து செல்வது ஏற்றதன்று
என்பதைக் காரணகாரியத்துடன் விளக்கினாள். இவை பிராட்டியை அனுமன்
நன்கு உணர்வதற்கு ஏதுவாயிற்று. இப் பாடல்கள் அனுமன் உள்ளத்திருந்த
கோது நீக்கின. நல்லனவற்றை நிறைவேற்றத் தீயவற்றைச் செய்யலாம் என்ற
பெருங்கோது என்க.                                           (26)