5372. | 'இருளும் ஞாலம் இராவணனால்; இது தெருளும், நீஇனிச் சில் பகல் தங்குறின்; மருளும் மன்னவற்கு, யான் சொலும் வாசகம் அருளுவாய்' என்று,அடியின் இறைஞ்சினான். |
(அம்மையே) இராவணனால் -இராவணனாலே; இருளும் - இருண்டு கிடக்கின்ற; இது ஞாலம் - இந்த உலகம் (உன்னால்); தெருளும் - தெளிவு பெறும்; சில்பகல் - சில முகூர்த்த நேரம்; தங்குறின் - யான் தாமதம் செய்தால்; மருளும் - (அதனால்) (யாதாயிற்றோ என்று) மருட்சியடையும்; மன்னற்கு - இராமபிரானுக்கு; யான் சொலும் வாசகம் - யான் கூறவேண்டிய பொன் (பொருள்) பொதிந்த மொழியை; இனி - இப்போது; அருளுவாய் - வழங்குவாயாக; என்று - என்று கூறி (அனுமன்); அடியின் இறைஞ்சினான் - (பிராட்டியின்) திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான். இராவணனால்இருண்ட ஞாலம் உன்னால் தெளிவு பெறும். சில்பகல் தங்குதல் பிராட்டிக்கு ஏற்றிக் கூறினர் சிலர். அனுமன், யான் காலதாமதம் செய்தால் பெருமான் மயங்கும் ஆதலின் விரைவில் செல்ல வேண்டும் என்று பிராட்டியிடம் கூறுகின்றான். தங்குதல் என்ற சொல்லுக்கு காலதாமதம் செய்தல் என்று பொருள். தரவு இடை தங்கல் ஓவிலன் (பொருநர் 173) தரல் இடத்துத் தாழ்த்தல் இலன் என்றுமாம், என்னும் சார்புரையை நோக்குக. (28) |