அனுமனிடம் சீதைகூறியவை 

5373.

'இன்னும்,ஈண்டு, ஒரு திங்கள் இருப்பல் யான்;
நின்னைநோக்கிப் பகர்ந்தது, நீதியோய் !
பின்னை ஆவிபிடிக்ககிலேன்; அந்த
மன்னன் ஆணை;இதனை மனக் கொள் நீ.

    நீதியோய் -நீதியின் வடிவான அனுமனே; யான் - நான்; இன்னும் -
மேலும்; ஈண்டு - இந்த இலங்கையில்; ஒரு திங்கள் இருப்பல் - ஒரு மாதம்
பெருமான் வருகைக்காக உயிருடன் இருப்பேன்; பின்னை - அதற்குப் பின்பு
(அவர் வரவில்லை எனின்); ஆவி பிடிக்ககிலேன் - என் உயிரை நிறுத்தி
வைக்கும் ஆற்றல் உள்ளேன் அல்லேன்; அந்த மன்னன் ஆணை - அந்த
அரசன் ஆணை; நின்னை நோக்கிப் பகர்ந்தது - உன் இயல்பைப் பார்த்துக்கூறப் பெற்றது; நீ - (அறிஞனாகிய) நீ; இதனை - இந்த மொழியை;
மனத்துக்கொள் - மனத்தில் அமைத்துக் கொள்க.

     நீ நீதிமான்இராவணன்பால் 'யாக்கை பேணி - நாண் இலாது இருந்தேன்
அல்லேன்..... புண்ணிய மூர்த்தி தன்னைக் காணலாம் இன்னும் என்னும்
காதலால் இருந்தேன்' என்றும், 'நின் தலைகள் சிந்தி வென்று நின்றருளும்
கோலம் காணிய கிடந்த வேட்கை.... அழியும் ஆவி தீர்க்கும்' (கம்ப.
7653,7654) என்றும் பேசியதை இ்ங்கே நினைக்கவும். ஒரு செயலின்,
உறுதிப்பாட்டையும், உண்மையையும் வெளிப் படுத்த ஆணையிடுவது மரபு.
அந்த ஆணை இறைவன் பெயராலும் மந்திரத்தின் பெயராலும் நிகழும். தீண்டு
வீராயின் எம்மைத் திருநீலகண்டம்.... என்றும் ஆணை கேட்ட பெரியவர்
என்றும் சேக்கிழார் குறிப்பர்.                                  (29)