5374.

' "ஆரம் தாழ் திரு மார்பற்கு அமைந்தது ஓர்
தாரம்தான்அலளேனும், தயா எனும்
ஈரம்தான் அகத்துஇல்லை என்றாலும், தன்
வீரம் காத்தலைவேண்டு" என்று வேண்டுவாய்.

     ஆரம் தாழ்திருமார்பற்கு - மாலை தங்கும்மார்புடைய இராம
பிரானுக்கு; அமைந்தது ஓர் - ஏற்புடைத்தான; தாரம் அலனேனும் -
மனைவியாக இல்லாவிடினும் (அதனால்); அகத்து - இராமபிரானின்
உள்ளத்தில்; தயா எனும் ஈரம் இல்லை என்றாலும் - கருணை இல்லாமற்
போனாலும்; தன் - தனக்கே உரித்தான; வீரம் காத்தலை - வீரத்தைப்
பாதுகாக்கும் பண்பை; வேண்டு - நீ விரும்புவாயாக; என்று வேண்டுவாய் -
என்று விண்ணப்பம் செய்வாயாக.

     ஆரம்தாழ் - மாலைதங்கிய. தாரம்தான் அலள் என்பதிலுள்ள தான்
அசை ஈரம் - அன்பு. ஈரம் ஆவதும் இற்பிறப்பாவதும் (வாலி வதை) ஈரம்
நீங்கிய சிற்றவை (நட்புக் கோள்) ஈரம் அளைஇ (குறள்) பிறர் துன்பம்
நோக்கிக் கொள்ளும் பண்பு ஈரம். யான் தகாதவளாய் இருத்தலின் பெருமான்
உள்ளத்தில் இருந்த ஈரம் உலர்ந்து போயிற்று.
 ஆனால் வீரம் கூடவாவற்றிப்
போக வேண்டும் ஈரம் உலர்ந்தது போல் வீரம் உலராமல் காத்துக் கொள்ள
வேண்டும் என்று பேசும் பிராட்டி மொழியில் வெறுப்பும் வெகுளியும்
புலப்படுகிறது. பிராட்டி உலகப் பெண்கள் போலவே பேசுகிறாள். திருமார்பற்கு
என்பதில் உள்ள நான்காம் உருபை ஏழன் உருபாக மாற்றி, திருமார்பின்பால்
என்றும் பொருள் கூறலாம். இந்த ஏழன் உருபு வேண்டு என்னும் ஏவலில்
நிறைவு பெறும். மார்பற்கு அமைந்தது ஓர் என்னும் சொற்பிணைப்பு அங்ஙனம்
உரைகூறுவதை வன்மையாகக் கண்டிக்கிறது.                      (30)