5380.

'அரசு வீற்றிருந்து ஆளவும், ஆய் மணிப்
புரசை யானையின்வீதியில் போகவும்,
விரசு கோலங்கள்காண விதி இலேன்;
உரை செய்துஎன்னை ? என் ஊழ்வினை
                            உன்னுவேன்.

     அரசுவீற்றிருந்து- (இராமபிரானுடன்) சிம்மாசனத்தில் ஒக்க இருந்து;
ஆளவும் - ஆட்சி புரியவும்; ஆய்மணி - அசையும் மணியையும்; புரசை -
கழுத்திடு கயிற்றையும் (பெற்ற); யானையின் - யானையின் மேலே; வீதியில்
போகவும் -
வீதியில் உலாச் செல்லவும்; விரசு கோலங்கள் - (பெருமானின்)
பொருந்திய பிற அலங்காரங்களை; காண(வும்) - பார்ப்பதற்கும்; விதியிலேன்
-
பாக்கியமில்லாத யான்; உரை செய்து என்னை - (பலபடியாக) பேசுவதால்
என்ன பயன்; என் ஊழ்வினை உன்னுவேன் - என்னுடைய பழவினையை
நினைந்து துன்பம் அடைவேன்.

     ஆய்தல் -அசைதல். ஆய்மதி (திருச்சிற் - 125 உரை - அடை - பதி)
புரசை - யானையின் கழுத்தில் கட்டப்படும் கயிறு. ஆளவும், போகவும்,
காணவும் விதியிலேன் என்று கூட்டுக. காணவும் என்பது காண என
வந்துள்ளது. உம்மைத் தொகை ஆளவும் போகவும் விதியிலேன் என்று
பொருள் கூறப்பெற்றது. ஏற்பின் ஏற்க. விதி - பாக்கியம். 'விதியில் சாக்கியர்'
என்னும் பகுதிக்குப் பாக்கியமில்லாத பௌத்தர் என்று விளக்கம் கூறப்
பெற்றது. அரசு என்றது அரசு கட்டிலை 'அரசு வீற்றிருக்க வீட்டீர்' (கம்ப.
4326) பழந்தமிழ் மன்னர் அரசியுடன் வீற்றிருத்தலை மெய்க்கீர்த்திகள் கூறும்.
'வீரசிம்மாசனத்து திரிபுவனமுடையாளொடும் வீற்றிருந்தருளிய' (முதற்
குலோத்துங்கன் மெய்க்கீர்த்தி)                              (36)