கலிவிருத்தம் (வேறு)

5382.

'எந்தை,யாய், முதலிய கிளைஞர் யார்க்கும், என்
வந்தனைவிளம்புதி; கவியின் மன்னனை,
"சுந்தரத்தோளனைத் தொடர்ந்து, காத்துப் போய்,
அந்தம் இல்திரு நகர்க்கு அரசன் ஆக்கு" என்பாய்.

(அனுமனே நீ)

     எந்தை, யாய்,முதலிய - என்னுடைய தந்தை தாய் முதலான;
கிளைஞர் யார்க்கும் - எல்லாச் சுற்றத்தார்க்கும்; என் - என்னுடைய;
வந்தனை விளம்புதி - வணக்கத்தைக் கூறுக (பிறகு); கவியின் வேந்தனை -
குரங்குகளின் தலைவனான சுக்கிரீவன்பால்; சுந்தரத் தோளனை - அழகிய
தோள்களைப் பெற்ற இராமபிரானை; தொடர்ந்து - பின்பற்றிச் சென்று;
அந்தம் இல் - முடிவில்லாத; திருநகர்க்கு - அழகிய அயோத்திக்கு; அரசன்ஆக்கு - மன்னவனாகச் செய்வாயாக; என்பாய் - என்று
கூறுவாயாக.

     சுந்தரத் தோளன்- திருமால். இங்கு இராமன் மேல் சாற்றிப் பேசப்
பெற்றது, திருமாலே இராமனாதலால் - மதுரக் கொழுஞ்சாறு கொண்ட சுந்தரத்
தோளுடையான் என்பது கோதையின் காதல் மொழி (நாச் 5.9.1) கவியின்
மன்னனை என்பதில் உள்ள இரண்டனுருபை ஏழன் உருபாக மாற்றுக,
மன்னன்பால் என்க.                                       (38)