அனுமன் சீதையைத்தேற்றல் 5383. | இத் திறம்அனையவள் இயம்ப, 'இன்னமும், தத்துறல்ஒழிந்திலை, தையல் நீ !' எனா, எத்திறத்துஏதுவும் இயைந்த இன் உரை, ஒத்தன, தெரிவுறஉணர்த்தினான் அரோ; |
அனையவள் -அங்ஙனம்நொந்த பிராட்டி; இத்திறம் - இப்படி (கலங்கி); இயம்ப - பலபடியாகப் பேச; (அனுமன்) பிராட்டியை நோக்கி) தையல் - அம்மையே; நீ - நீ; இன்னமும் - இன்னும்கூட; தத்துறல் ஒழித்திலை - கலங்குதலை விட்டாயில்லை; எனா - என்று முன்னுரை பேசி; எத்திறத்தும் - காரணங்களும் (காரியங்களும்); இயைந்த - அமைந்துள்ளனவும்; ஒத்தன - அறிவு ஒவ்வக் கூடியனவும் ஆன; இன்உரை - இனிய மொழியை; தெரிவுற - மனம் தெளிவு அடையும்படி; உணர்த்தினான் - உணரும்படி கூறினான்; இன்உரைஉணர்த்தினான். எத்திறத்து ஏதுவும் இயைந்த, ஒத்தன, இன்உரை, என்று கூட்டுக. எத்திறத்தும் என்பது எத்திறத்து என்று வந்துள்ளது. உம்மைத் தொகை - அரோ - அசை. இவ்விருத்தம் விளம் - விளம் - மா - கூவிளம் என்னும் சீர்களைப் பெற்றுவரும். இந்நூலில் 2177 முறை இவ்விருத்தம் காட்சிதருகிறது. (39) |