வஞ்சிவிருத்தம்

5384.

'வீவாய், நீ இவண்; மெய் அஃதே ?
ஓய்வான், இன்உயிர், உய்வானாம் !
போய், வான் அந் நகர் புக்கு அன்றோ
வேய்வான்மௌலியும் ? மெய் அன்றோ ?

(பிராட்டியே)

     நீ இவண்வீவாய் - நீ இங்கே இறந்து விடுவாய்; அஃது மெய்யே -
அது உண்மையே; (நீ இறந்தபின்) ஓய்வான் - (பிரிவாற்றாமையால்)
தளர்ந்துள்ள இராமபிரான்; இன் உயிர் உய்வானாம் - இனிய உயிர் தப்பி
வாழ்வானாம்; போய் - காட்டை விட்டுச் சென்று; வான் அந்நகர்
புக்குஅன்றோ -
சிறந்த அயோத்தி நகர் புகுந்த பிறகல்லவா; மௌலியும்
வேய்வான் -
முடிசூட்டிக் கொள்வான்; மெய்யன்றே - இவை யாவும் நிகழக்
கூடிய உண்மை யல்லவா.

     இப்பாடலில்கூறப்பட்ட உடன்பாடு யாவும் எதிர்மறைப் பொருளில்
வந்தவை. எடு்த்தல் ஓசையால் கூறி இதனுள் உள்ள எதிர்மறைப் பொருளை
அறிக. இப்பாடலின் நடை எதிர்மறைப் பொருள் தருவதற்கேற்ப
அமைந்துள்ளது. இராமபிரான், பதினான்கு வருடம் முடியுமுன் எந்த நகரிலும்
புகேன் என்று விரதம் எடுத்துக் கொண்டது பேசப் பெற்றது. போவான் என்ற
பாடமே சிறந்தது. இவ்விருத்தம் மா - விளம் - காய் என்னும் சீர்களைப்
பெற்று வரும். இத்தகைய பாடல்கள் இந்நூலில் 14 உள்ளன. எட்டு ஒன்பது
அளவியற் சந்தம் என்று கம்பன் அடிப்பொடி அவர்கள் குறிக்கின்றார்.  (40)