5389.

'மாட்டாதார் சிறை வைத்தோயை,
"மீட்டாம்"என்கிலம் மீள்வாமேல்,
நாட்டார்,நல்லவர், நல் நூலும்
கேட்டார், இவ்உரை கேட்பாரோ ?

(நாங்கள்)

     மாட்டாதார் -வலிமைஅற்ற அரக்கர்களால்; சிறைவைத் தோயை -
சிறையில் வைக்கப்பட்ட உன்னை; மீட்டாம் என்கிலம் - மீட்டுவிட்டுடோம்
என்று கூறாமல்; மீள்வாமேல் - யாங்கள் திரும்பிச் சென்றால்; இவ் உரை -
திரும்பச் சென்றோம் என்ற இந்த மொழியை; நாட்டார் - நாட்டுப்
பொதுமக்களும்; நல்லவர் - தூய மனம் பெற்றவர்களும்; நன்னூல் கேட்டார்
-
நல்ல சாத்திரங்களைப் படித் தவர்களும்; கேட்பாரோ - ஏற்றுக்
கொள்வாரோ.

     நாங்கள் உண்மையாகத்திரும்பினாலும் உலகம் ஏற்காது. அங்ஙனம்
இருக்க நீ நம்பிக்கை இழந்து பேசலாமா என்பது கருத்து. கேட்டல் - ஏற்றுக்
கொள்ளுதல் (திருக்குறள் 643) (அண்ணாமலை பதிப்பு) வஞ்சகம் செய்து
தேவியைக் கவர்தலின் மாட்டாதார் என்று கூறப் பெற்றது. நன்னூலும்
என்பதில் உம் அசை. நாட்டார் - பொதுமக்கள். நன்னூல் கேட்டார் -
அறிஞர்கள் நல்லவர் - ஞானிகள். சிறைவைத்தோய் என்னும் செய்வினை
செயப்பாட்டுப் பொருளில் வந்தது. படு என்பது மறைந்து வந்துள்ளது. இதனை
'படுதொகை' என்று சிலர் கூறுவதாக இலக்கணக் கொத்து இயம்பும் (இல. கொ.
79) கேட்டால் என்னை கிளர்ப்பாரோ என்னும் பாடம் (25 ஆம் பிரதி) உண்டு.
                                                          (45)