5391.

'கெட்டேன்! நீ உயிர் கேதத்தால்
விட்டாய்என்றிடின், வெவ் அம்பால்,
ஒட்டாரோடு, உலகுஓர் ஏழும்
சுட்டாலும்,தொலையா அன்றோ ?

     கேதத்தால் -பிரிவாகிய துக்கத்தாலே; நீ உயிர் விட்டாய் என்றிடில்
-
நீ உயிரை விட்டாய் என்றால்; கெட்டேன் - யான் அழிந்தேன் (பிறகு);
வெவ்அம்பால் - கொடிய அம்பினாலே; ஒட்டாரோடு - பகைவர்களாகிய
அரக்கர்களுடன்; ஓர் ஏழு உலகும் - ஒப்பற்ற ஏழு உலகங்களையும்;
சுட்டாலும் - சுட்டு எரித்தாலும்; தொலையாது அன்றோ - பழி
நீங்காதல்லவா;

     கேதம் -துக்கம். 'கேதம் கெடுத்து என்னை ஆண்டருளும்' (திருவாசகம்
595) ஒட்டார் - பகைவர் கெட்டேன் - இரக்கத்தையும் அச்சத்தையும்
உணர்த்தும் சொல். இன்று, தொலைந்தேன், செத்தேன் என்று பேசப்படுவது
போன்றது.                                                 (47)