5392.

'முன்னே, கொல்வான் மூஉலகும்,
பொன்னேபொங்கிய போர் வில்லான்,
என்னே ! நின்நிலை ஈது என்றால்,
பின்னே, செம்மைபிடிப்பானோ ?

     பொன்னே -திருமகளே!; முன்னே - (அரக்கரின் இயல்பு தெரிந்த)
அன்று; மூஉலகும் - மூன்று உலகங்களையும்; கொல்வான் - அழிக்கும்
பொருட்டு; பொங்கிய - சினந்து எழுந்த; போர்வில்லான் - போரில்வல்ல
வில்லேந்திய இராமபிரான்; நின்நிலை - உன்னுடைய நிலைமை; ஈது என்றால்- இப்படிப்பட்டது என்று
 அறிந்தால்; பின்னே - மறுபடியும்;
செம்மை - சாந்தப் பண்பை; பிடிப்பானோ - மேற்கொள்வானோ; என்னே
-
இது என்னே !

     அரக்கர்களின்கொடுமையைக் கேட்டபோது சீறினான். இப்போது அவர்
கொடுமையை அறிந்து விட்டான். இனி அவன் அமைதியாக இரான் என்பது
குறிப்பு. முனிவர்கட்குத் தீங்கு செய்ததற்காகவே அரக்கர்களைக் கொல்ல
நினைத்துள்ளவன், தன் மாட்டு தீங்கு செய்த அவர்களை விட்டிடுவானோ
என்பது வை.மு.கோ வின் வி்ளக்கம். இராமபிரான் மூன்று உலகங்களையும்
அழிக்க எண்ணியதை 'எண்திசை இறுதியான உலகங்கள் இவற்றை.....
களையுமாறு இன்று காண்டி' என்னும் பாடலால் அறிக (கம்ப. 3519)     (48)